முதல்வராக 4-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்த எடப்பாடி பழனிசாமி..! இனிப்பு வழங்கி உற்சாக கொண்டாட்டம்!!
முதல்வர் பதவியில் எடப்பாடி பழனிசாமி 3 ஆண்டுகளை நிறைவு செய்து வெற்றிகரமாக 4 – வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார். இதையொட்டி அதிமுக தலைமை அலுவலகத்தில் இனிப்புகளை வழங்கி கொண்டாடப்பட்டது.
2016-ல் தொடர்ந்து 2-வது முறையாக அதிமுக ஆட்சியமைக்க 5 வது முறையாக ஜெயலலிதா முதல்வரானார். ஆனால் பதவியேற்ற 4 மாதங்களில் உடல் நிலை சரியில்லாமல் 75 நாட்கள் சிகிச்சையில் இருந்த ஜெயலலிதா 2016 டிசம்பர் 5-ல் மரணமடைந்தார். ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுகவில் நிகழ்ந்த குழப்பங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.
முதல்வராக ஓ.பி.எஸ்.சும், ஜெ.அமைச்சரவையில் இருந்த அத்தனை அமைச்சர்களும் மீண்டும் அமைச்சர்கள் ஆகினர். ஆனால், சசிகலா தரப்பு ஆட்சியையும், கட்சியையும் வசப்படுத்த முயல கட்சியில் பூகம்பம் வெடித்தது.ஓபிஎஸ்சிடம் இருந்து முதல்வர் பதவி பறிக்கப்பட, கட்சியை உடைத்து தர்மயுத்தம் தொடங்கினார்.
ஆனாலும் பெரும்பான்மை அதிமுக எம்எல்ஏக்களை வலை வீசிப் பிடித்து, வசப்படுத்தி கூவத்தூரில் அடைத்து வைத்து முதல்வர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டார் சசிகலா.
ஆனால் அடுத்த 2 நாட்களிலேயே சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வெளியாகி, 4 ஆண்டு தண்டனைக்கு ஆளான சசிகலாவால் முதல்வராக கோட்டைக்கு செல்ல முடியவில்லை. தண்டனை கைதி குற்றவாளியாக பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறைக்குத் தான் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது .

அப்போதுதான் அடுத்த முதல்வர் யார்? என்ற கேள்வியும் எழுந்தது. சிறை செல்லும் முன் கூவத்தூரில் வைத்தே சசிகலா ஆலோசனை நடத்தினார். அப்போதுதான் எடப்பாடி பழனிசாமிக்கு அந்த அதிர்ஷ்டம் கிடைத்து முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். ரஜினி சொன்னது போல, முதல்வராவோம் என எடப்பாடியார் கனவில் கூட நினைத்து பார்த்திருக்க மாட்டார் எனலாம்.
இப்படி ஒரு எதிர்பாரா திருப்பம் அரங்கேறி கடந்த 2017 பிப்ரவரி 16-ம் நாளில் தமிழகத்தின் முதல்வர் நாற்காலியில் அமர்ந்தார் எடப்பாடி பழனிசாமி . அவர் முதல்வராக பதவியேற்றது முதலே அதிமுக ஆட்சி எத்தனை நாளைக்கு நீடிக்கும்? இப்போ கவிழும்? அப்போ கவிழும்?என்ற விவாதங்கள் தொடர்ந்தன.
ஆனால் எத்தனை எத்தனையோ இடையூறுகள், சலசலப்புகள் என ஆட்சிக்கு எதிராக எழுந்த அத்துனை சவால்களையும் சமாளித்து விட்டார் என்றே கூறலாம். தனது ஆட்சியையும் 3 ஆண்டுகள் நிறைவு செய்து விட்டார். கட்சியிலும் எல்லாமே தான் தான் என்ற நிலைக்கும் உயர்ந்து விட்டார்.
இன்று முதல்வராக 4-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் எடப்பாடி பழனிசாமி, கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு வருகை தந்தார். அப்போது அவருக்கு அமைச்சர்களும், தொண்டர்களும் உற்சாகமாக வாழ்த்து தெரிவிக்க, இனிப்புகளை வழங்கி மகிழ்ந்தார் எடப்பாடி பழனிச்சாமி.
எப்படியும் 2021 தேர்தல் வரைக்கும் எடப்பாடியார் முதல்வர் நாற்காலியில் கெட்டியாக பிடித்துக் கொள்வார் என்றும் எதிர்பார்ப்போம்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




