நடிகர் விஜய் வீட்டில் இன்றும் வருமான வரித்துறை சோதனை..! ராப்பகலாக தொடர்வதால் பரபரப்பு!!
நடிகர் விஜய், திரைப்பட தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம், சினிமா பைனான்சியர் அன்புச் செழியன் ஆகியோர் வீடு, அலுவலகங்களில் வருமான வரிச் சோதனை 2-வது நாளாக நீடிக்கிறது.
நேற்று மாலை தொடங்கிய இந்தச் சோதனை விடிய விடிய நடைபெற்று இடைவெளி விடாமல் இன்றும் தொடர்கிறது .
நடிகர் விஜய் நடிப்பில் கடந்த தீபாவளிக்கு வெளியானது பிகில் திரைப்படம். இந்தப் படம் வெற்றிகரமாக ஓடி வசூலை அள்ளியது. இந்தத் திரைப்படத்தில் நடிக்க நடிகர் விஜய் வாங்கிய சம்பளம் மற்றும் படத்தயாரிப்பு, பட வசூல் ஆகியவற்றில் வருமான வரி ஏய்ப்பு நடைபெற்றதாக வருமான வரித்துறைக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
இதனால் நடிகர் விஜய், பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனத்தின் உரிமையாளர் கல்பாத்தி அகோரம், படத்துக்கு பைனான்ஸ் செய்ததாகக் கூறப்படும் மதுரை அன்புச் செழியன் ஆகிய மூவரையும் குறிவைத்து வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளனர்.
கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சியில் மாஸ்டர் படப்பிடிப்பில் இருந்த நடிகர் விஜய்யிடம் நேரில் விசாரணை நடத்திய வருமான வரி அதிகாரிகள், அவரை அப்படியே சென்னைக்கு காரில் அழைத்து வந்தனர்.
தொடர்ந்து சென்னை பனையூரில் உள்ள விஜய்யின் பண்ணை வீட்டில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அத்துடன் பிகில் படத்தில் நடிக்க வாங்கிய சம்பளம் குறித்து விஜய்யிடம் அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டதாகவும் தெரிகிறது.
இதே போல் படத் தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரத்தின் தி.நகர் அலுவலகம் மற்றும் வீடுகளிலும் அதிகாரிகள் தனித்தனி குழுக்களாக பிரிந்து சோதனையில் ஈடுபட்டனர். இந்தப் படத்திற்கு பல கோடி பணத்தை பைனான்ஸ் செய்ததாக சந்தேகித்து,
மதுரையைச் சேர்ந்த பிரபல பைனான்ஸ் புள்ளி அன்புச் செழியனின் மதுரை அலுவலகம் மற்றும் வீடு, சென்னை தி.நகரில் உள்ள அவருக்குச் சொந்தமான கோபுரம் பிலிம்ஸ் அலுவலகம் ஆகியவற்றிலும் சோதனை நடத்திய அதிகாரிகள் முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதாகவும் கூறப்படுகிறது.
எனவே, நேற்று இரவு முழுவதும் நடிகர் விஜய், தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம், பைனான்சியர் அன்புச் செழியன் ஆகியோரின் வீடு மற்றும் அலுவலகங்களில் விடிய விடிய சோதனையைத் தொடர்ந்த வருமான வரித்துறை அதிகாரிகள், இன்றும் 2-வது நாளாக சோதனையைத் தொடர்கின்றனர்.
வருமான வரித்துறை அதிகாரிகளின் இந்த அதிரடிச் சோதனை திரையுலகத்தினர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




