துணை முதல்வர் ஓ.பி.எஸ்.உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க விவகாரத்தில் திமுக கொறடா கொடுத்த மனு மீது நடவடிக்கை எப்போது என்பது குறித்து பதிலளிக்க சபாநாயகருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்Mது. இதனால் இந்த வழக்கில் அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது.
ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுகவில் பிளவு ஏற்பட்டது. ஓபிஎஸ், இபிஎஸ் என இரு அணிகளாக பிளவுபட்ட நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு மீது சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது.இதில் ஓபிஎஸ் தரப்பு எம்எல்ஏக்கள் 11 பேர் எதிராக வாக்களித்தனர். பின்னர் இரு அணிகளும் இணைந்து ஒரே அதிமுக என ஐக்கியமாகிவிட்டனர்.
ஆனால் நம்பிக்கை வாக்கெடுப்பில் எதிராக வாக்களித்தவர்களை தகுதி நீக்கம் செய்யக் கோரி திமுக தரப்பில் சபாநாயகரிடம் மனு கொடுக்கப்பட்டது. ஆனால் 3 ஆண்டுகளாகியும் சபாநாயகர் நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கும் ஒரு வருடமாக கிடப்பில் போடப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த தகுதி நீக்க வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. திமுக தரப்பில் கபில் சிபல், ஓபிஎஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.
இதைத் தொடர்ந்து, தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தார். 11 பேரை தகுதி நீக்கம் செய்வது தொடர்பாக, சபாநாயகர் வேறு வருடங்கள் ஆகியும் முடிவு எடுக்காமல் இருப்பது அவசியமற்றது .அவர் பொறுமை காக்க முடியாது. தகுதி நீக்கம் கோரும் மனுவை கிடப்பில் வைத்திருக்க முடியாது . எனவே திமுக தரப்பில் கொடுத்த மனு சபாநாயகர் எப்போது நடவடிக்கை எடுக்கப் போகிறார் என சட்டப்பேரவை செயலாளர் பதிலளிக்க வேண்டும் என்று கூறி வழக்கு விசாரணையை வரும் 14-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இதனால் ஓபிஎஸ் உள்ளிட்ட 11 பேர் மீதான தகுதி நீக்க வழக்கில் அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது. சபாநாயகர் என்ன பதில் கூறப் போகிறார் என்ற பெரும் எதிர்பார்ப்பும் எழுந்துள்ளதால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.