தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று காலை நடைபெற்றது. இதில் தமிழக அரசின் 2020-2021-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் இடம் பெறும் அம்சங்கள் உள்ளிட்ட முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.
2020-ம் ஆண்டின் முதல் தமிழக அமைச்சரவைக் கூட்டம் கடந்த மாதம் 20-ந் தேதி நடைபெற்றது.இந்நிலையில் 2-வது முறையாக இன்று அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூடியது. தலைமைச் செயலகத்தில் காலை 10.30 மணிக்கு கூடிய இந்த அமைச்சரவை கூட்டத்தில், தமிழக பட்ஜெட் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.
அடுத்தாண்டு தமிழக சட்டப் பேரவைக்கு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தற்போதைய அதிமுக அரசின் முழுமையான கடைசி பட்ஜெட் தற்போது தாக்கல் செய்யப்பட உள்ளது. இம்மாத இறுதி அல்லது மார்ச் முதல் வாரத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதனால் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட வேண்டிய முக்கிய அறிவிப்புகள், திட்டங்கள் குறித்து அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.
மேலும், தமிழகத்தில் புதிய தொழில் தொடங்க நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குவது குறித்தும்,
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் இக்கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டதாகவும் தெரிகிறது.