காவல்துறையில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றவர் பாலகுமார். இவரது மகள் தீபிகா. தந்தையின் எதிர்ப்பை மீறி வீட்டை விட்டு வெளியேறி தான் காதலித்து அதே பகுதியை சேர்ந்த சாய்குமார் என்பவரை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்தநிலையில் 5 மாதம் கர்ப்பமாக உள்ள மகள் தீபிகாவின் வீட்டிற்கு வந்த பாலகுமார் மகளை தனது வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார்.
ஆனால் இதற்கு தீபிகா மறுப்பு தெரிவித்ததால், பாலகுமாருடன் வந்த 4 பேர் வீட்டிற்குள் நுழைந்து ரசாயன பவுடர் கலந்த அமிலத்தை தீபிகாவின் முகத்தில் பூசியுள்ளனர். வீட்டில் ஆண்கள் இல்லாத நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தை தடுக்க வந்த அவரது மாமியார் பாக்கியலட்சுமி மற்றும் கர்ப்பமாக உள்ள அந்த வீட்டின் மற்றொரு மருமகள் சந்தியா ஆகியோரது முகத்திலும் அவர்கள் அமிலத்தை பூசியுள்ளனர்.
அமிலம் பூசப்பட்டதில் முகம் வெந்து மயக்கமடைந்த தீபிகாவை தான் கொண்டு வந்த காரில் பாலகுமார் கடத்தி சென்றுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக சாய்குமாரின் தந்தை பாலாஜி செவ்வாய்ப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தகவலறிந்த பாலகுமார் தனது மகளை வேப்பம்பட்டு மெயின் ரோட்டில் இறக்கி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.
இதையடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தீபிகாவிடம் மேற்கொண்ட விசாரணையில் கணவன் சாய்குமாரை பிரிந்து வீட்டிற்கு வராவிட்டால் கொன்றுவிடுவதாக மிரட்டி தந்தை பாலகுமார் தன்னை அடித்து உதைத்த தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் பாலகுமாரா தேடி வருகின்றனர்.