குரூப் 4 முறைகேடு : என் மீது குற்றம் சாட்டுவதா..? தயாநிதி மாறன் மீது வழக்கு..! அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்!!

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக தம் மீது குற்றம் சாட்டிய தயாநிதி எம்.பி., மீது வழக்கு தொடரப் போவதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

 

டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப் 4 தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றது அம்பலமாகி, தமிழகமே பரபரத்துக் கிடக்கிறது. முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி நடத்தி வரும் விசாரணையில் தேர்வு எழுதியவர்கள் முதல், இடைத்தரகர்கள் அரசு ஊழியர்கள் என தினமும் பலர் கைதாகி வருவதால், இந்த விவகாரம் விஸ்வரூபமெடுத்துள்ளது.

 

தற்போது விசாரனை வளையத்தில் அரசுத்துறைகளின் உயர் அதிகாரிகள் சிலரும் சிக்கியுள்ளனர். மிகப் பெரிய அளவில் நடைபெற்றுள்ள இந்த முறைகேட்டில் விசாரணை வளையம் நீண்டு கொண்டே போய் மேலும் பல முக்கியப் புள்ளிகள் சிக்குவார்கள் எனக் கூறப்படுகிறது.

இதனால் இந்த முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட பலரும் வலியுறுத்தியுள்ளனர். மேலும் இத்துறையின் அமைச்சர் ஜெயக்குமாரை டிஸ்மிஸ் செய்யவும் ஆளுநருக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

இந்நிலையில் திமுக எம்.பி.யான தயாநிதி மாறன், இந்த முறைகேட்டில் அமைச்சர் ஜெயக்குமாருக்கு தொடர்பு உள்ளது எனவும் , அதற்கான ஆதாரம் இருப்பதாகவும் பகிரங்கமாக தெரிவித்திருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

தயாநிதி மாறன் குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள அமைச்சர் ஜெயக்குமார், என் மீது இப்படி குற்றம் சாட்டுபவர்கள் தங்கள் யோக்யதை என்ன? என்று பார்க்க வேண்டும். பொய்யான குற்றச்சாட்டு கூறியுள்ள தயாநிதி மாறன் மீது வழக்குத் தொடர்வேன் என ஆவேசமாக தெரிவித்துள்ளார்.


Leave a Reply