கோவில்பட்டி ஒன்றிய தலைவர் தேர்தலில் தில்லுமுல்லு புகார்..! 5 மணி நேரம் கனிமொழி எம்.பி., தர்ணா!!!

கோவில்பட்டி ஒன்றிய குழு தலைவர் பதவிக்கு இன்று நடந்த மறு தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறி, திமுக எம்.பி., கனிமொழி 4 மணி நேரத்திற்கும் மேலாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது .

 

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த மாதம் நடைபெற்றது. தொடர்ந்து மாவட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றியங்களின் தலைவர் மற்றும் துணைத் தலைவர், ஊராட்சி துணைத் தலைவர் பதவிகளுக்கு கடந்த 11-ந் தேதி மறைமுகத் தேர்தல் நடைபெற்றது.இதில் பல இடங்களில் மோதல் வெடித்தது. இதனால் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது.சில இடங்களில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உடல் நிலை சரியில்லை எனக் கூறி தேர்தலை ரத்து செய்தனர்.

 

இப்படி தமிழகம் முழுவதும் பல இடங்களில் மறைமுகத்தேர்தல் தள்ளி வைக்கப்பட்ட இடங்களில் இன்று தேர்தல் நடைபெற்றது. இன்றும் சில இடங்களில் மீண்டும் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. இது போல் கோவில்பட்டி ஒன்றிய குழு தலைவர் பதவிக்கு கடந்த 11-ந் தேதி தேர்தல் நடைபெற இருந்த நிலையில், தேர்தல் நடத்தும் அலுவலர் வராததால் தள்ளி வைக்கப்பட்டிருந்த தேர்தல் இன்று நடைபெற்றது. இங்கு திமுக தரப்பில் பூமாரியும், அதிமுக தரப்பில் கஸ்தூரியும் தலைவர் பதவிக்கு போட்டியிட்டனர். இங்கு மொத்தம் உள்ள 19 கவுன்சிலர்களில் திமுக தரப்புக்கு 10 பேரும், அதிமுகவுக்கு 9 பேரும் ஆதரவாக இருந்தனர். வாக்களிக்க வரும் போதும் இவ்வாறே அணியாக வந்தனர்.

 

ஆனால் வாக்கு எண்ணிக்கை முடிவில் அதிமுக வேட்பாளருக்கு 10 ஓட்டுகளும், திமுக வேட்பாளருக்கு 9 வாக்குகளும் கிடைத்துள்ளதாக தேர்தல் அதிகாரி உமாசங்கர் அறிவிக்க சர்ச்சையாகி விட்டது. முறைகேடாக அதிமுக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளதாக திமுக தரப்பினர் குற்றம்சாட்டி, அங்கேயே தர்ணாவில் ஈடுபட்டனர். திமுக தரப்பு கவுன்சிலர்கள் 10 பேரும், தாங்கள் திமுக வேட்பாளருக்குத் தான் ஓட்டுப் போட்டோம். எப்படி மாறும் ? என சத்தியம் செய்யாத குறையாக அதிகாரியிடம் மன்றாடியும் எடுபடவில்லை.இதனால் அதிகாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு முற்றுகையிலும் ஈடுபட்டனர்.

 

இது பற்றி கேள்விப்பட்ட கனிமொழி எம்.பி.,யும் கோவில்பட்டி விரைந்தார். அவரும் தேர்தல் அதிகாரியிடம், மீண்டும் தேர்தல் நடத்துமாறு கெஞ்சாத குறையாக மன்றாடினார். ஆனாலும் தேர்தல் அதிகாரி பிடிவாதம் செய்ய சாலையில் அமர்ந்து 5 மணி நேரத்திற்கும் மேலாக கனிமொழி போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பானது. முறைகேடாக தேர்தல் முடிவை அறிவித்ததை எதிர்த்து தேர்தல் ஆணையத்தில் முறையிடப் போவதாகவும், வழக்கும் தொடரப் போவதாக கனிமொழி ஆவேசமாக தெரிவித்தார். இதற்கிடையில் மாலை 3 மணிக்கு நடைபெற இருந்த துணைத் தலைவர் தேர்தல் ரத்து செய்யப்பட்டது .திமுக தரப்பைச் சேர்ந்த 10 கவுன்சிலர்களும் கனிமொழியுடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு தேர்தலை புறக்கணித்ததால், போதிய உறுப்பினர்கள் இல்லை என்ற காரணத்தால் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.


Leave a Reply