8-ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு..? அதிகாரி சர்க்குலர்..! அமைச்சரோ மறுப்பு..! கல்வித் துறையில் தொடரும் குழப்பம்!!

எட்டாம் வகுப்புக்கு பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளிகளில் தினமும் மாலையில் ஒரு மணி நேரம் சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டும் என மாவட்ட கல்வி அதிகாரிகள் உத்தரவு பிறப்பிக்க, அப்படியெல்லாம் இல்லை. பள்ளி நேரத்திலேயே சிறப்பு வகுப்பு நடத்தப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளது, பள்ளி கல்வித்துறையில் நிலவும் குழப்பத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

 

இந்தாண்டு முதல் 5 மற்றும் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்புக்கு பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. சிறு வயது குழந்தைகளை பொதுத்தேர்வு என கட்டாயப்படுத்துவது மன ரீதியில் அவர்களை பாதிக்கும். பள்ளிப்படிப்பை இடையில் நிறுத்தும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் சூழல் உருவாகும் என பல தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்து வருகிறது. ஆனாலும், பொதுத் தேர்வுகள் கட்டாயம் நடைபெறும். ஆனால் மாணவர்களை மூன்று ஆண்டுகளுக்கு பெயிலாக்க மாட்டோம் என அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

இந்நிலையில் பொதுத் தேர்வுக்கான கால அட்டவணை வெளியான நிலையில், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை நேரத்தில் தினமும் ஒரு மணி நேரம் சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டுமென மாவட்ட கல்வி அதிகாரிகள் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளிக்கல்வித்துறையின் இந்த முடிவு, ஏற்கனவே பொதுத்தேர்வு என்ற மன உளைச்சலில் இருக்கும் சிறுவயது மாணவர்களை மேலும் நெருக்கடிக்கு உண்டாக்கும் என பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கொந்தளித்துப் போய் உள்ளனர்.

 

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையனிடம் கேட்டதற்கு, மாலை நேரத்தில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படாது. பள்ளி நேரத்திலேயே சிறப்பு வகுப்புகள் நடத்தலாம். சிறப்பு வகுப்புகளில் மாணவர்கள் விரும்பினால் மட்டுமே பங்கேற்கலாம் என ஒரு குழப்பமான கருத்தை கூறியுள்ளது குழப்பத்தை மேலும் அதிகரித்துள்ளது. பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் ஒரு உத்தரவு போடுவதும் அதனை வாய்மொழியாக அமைச்சர் மறுப்பதும் அத்துறையில் நிலவும் குழப்பத்தை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.


Leave a Reply