தூய்மை இந்தியா திட்டம், திறந்தவெளி கழிப்பிடம் இல்லா இந்தியா என்று தூய்மைக்கான பரப்புரைகள் மேற்கொள்ளப்படும் இடத்தில்தான் திறந்தவெளியில் இயற்கை உபாதை கழிக்க போன 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.
இந்த கொடூரம் சிறுமிக்கு நேர்ந்த விதம் சிறுமியின் உறவினர்களும் ஊர் மக்களையும் உலுக்கியுள்ளது. சிவகாசி அருகே உள்ள இந்த கிராம மக்கள் தங்கள் இயற்கை உபாதைகளை கழிக்க காட்டு பகுதிக்கு செல்வது தான் வழக்கம். அதுபோன்றுதான் கடந்த 20ஆம் தேதி பள்ளி முடிந்து வீடு திரும்பிய 8 வயது சிறுமி இயற்கை உபாதை கழிக்க சென்றார்.
அப்போது காணாமல்போன சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்ட கொடூரம் நடந்துள்ளது. இந்தப் பகுதியில் உள்ள பெண்கள் திறந்தவெளி இடத்தில் அச்சத்துடனே இயற்கை உபாதை கழிக்க செல்வதாக கூறுகிறார்கள்.
கடந்தாண்டு மே மாதம் 12ஆம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே இயற்கை உபாதை கழிக்க போன இரண்டு சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி நடைபெற்றது. இதேபோல ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதி மதுரை அருகே வீட்டில் கழிவறை இல்லாததால் இயற்கை உபாதையை கழிக்க போன இளம்பெண்ணை சிலர் கேலி கிண்டல் செய்ததை தட்டிக்கேட்ட தந்தை கொலை செய்யப்பட்ட சம்பவம் நடைபெற்றது.
கழிவறை இல்லாததால் திறந்தவெளியில் பயன்படுத்துவதால் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு நேரும் இதுபோன்ற கொடூரங்களுக்கு முற்றுப்புள்ளி எப்போது என்பது மிகப்பெரிய கேள்வியாகவே உள்ளது.