--- --:--:-- --

சாய்பாபா பிறந்த இடம் குறித்த சர்ச்சை..! இனி கருத்து கூற மாட்டேன்…! உத்தவ் தாக்கரே பல்டி!!

IMG-20200121-WA0032

சாய்பாபா பிறந்த இடம் எது? என்ற பேச்சை மீண்டும் எழுப்பப் போவதில்லை என மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளதால் சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளது. இதனை வரவேற்று போராட்டங்களை வாபஸ் பெறுவதாக ஷீரடி பகுதி மக்கள் அறிவித்துள்ளனர்.

 

மகாராஷ்டிரா மாநிலம் ஷீரடியில் சாய்பாபா சமாதி உள்ளது. இங்கு தான் பல காலம் வாழ்ந்து சமாதி அடைந்த சாய்பாபாவுக்கு கோவிலும் எழுப்பப்பட்டு, நாடு முழுவதும் மட்டுமின்றி வெளிநாட்டு பக்தர்களும் தரிசனம் செய்து வருகின்றனர்.

 

ஷீரடியில் சாய்பாபா பல ஆண்டுகள் வாழ்ந்தாலும் அவர் பிறந்தது எங்கே? என்பது பல ஆண்டுகளாகவே விவாதப் பொருளாக உள்ளது. சாய்பாபாவும் தமது பிறப்பிடம் எது? என்பதை கடைசி வரை வெளிப்படுத்தவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

இந்நிலையில், மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, பர்பானி மாவட்டத்தில் உள்ள பத்ரி என்ற ஊரில் தான் சாய்பாபா பிறந்தார் என்று கூறியது சர்ச்சையானது. மேலும் பத்ரியில் அடிப்படை மேம்பாட்டு வசதிகளுக்காக ரூ.100 கோடி ஒதுக்கப்படுவதாகவும் உத்தவ் தாக்கரே அறிவித்தார்.

 

இதனால் ஷீரடியில் உள்ள சாய் பாபா கோயில் மூடப்படுமோ? என்ற அச்சம் அப்பகுதிவாசிகளுக்கு ஏற்பட்டது. பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் உத்தவ் தாக்கரே அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தன.

எனவே, முதல்வர் உத்தவ் தாக்கரேவின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஷீரடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்தவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதித்தனர்.

 

இதனால் கடைகள், வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டு வாகனப் போக்குவரத்தும் முடங்கியது. ஆனால் சாய்பாபா கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு மட்டும் எந்த பாதிப்பும் இல்லாமல் உரிய வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது.

 

இந்நிலையில் ஷீரடி சாய்பாபா அறக்கட்டளை நிர்வாகிகளும், ஷீரடி பகுதி பிரதிநிதிகளும் அப்பகுதி சிவசேனா கட்சி எம்.பி., எம்எல்ஏ., ஆகியோரும், முதல்வர் உத்தவ் தாக்கரேவை சந்தித்தனர்.

 

அப்போது, ஷீரடி சாய்பாபா பிறந்த இடம் குறித்த கருத்தை மேலும் தொடரப்போவதில்லை என உத்தவ் தாக்கரே உறுதியளித்தார். இதனால் இத்துடன் இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் எனவும் முதல்வர் உத்தவ் உறுதியளித்ததை ஏற்று போராட்டங்களை வாபஸ் பெறுவதாக ஷீரடி பகுதி மக்கள் அறிவித்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon