சீனாவில் வேகமாக பரவிவரும் ஆட்கொல்லி வைரஸ் கொரோனா மனிதர்களிடமிருந்து மற்ற மனிதர்களுக்கும் பரவி வருவதால் இது அபாயகரமான தொற்றுநோய் என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த வைரஸ் தாக்குதலால் ஏற்கனவே மூன்று பேர் இறந்த நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 225 ஆக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் தாக்கியவர்களுக்கு சிகிச்சை அளித்த 14 மருத்துவ ஊழியர்களும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளதை உறுதி செய்திருக்கும் சீன சுகாதாரத்துறை அதிகாரிகள் வேகமான தொற்று நோய் என தெரிவித்திருக்கிறார்கள். தென்கொரியா ஜப்பான் மற்றும் தாய்லாந்திலும் இந்த வைரஸ் தாக்குதல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த வாரம் சீன புத்தாண்டு கொண்டாட இருக்கும் நிலையில் பொதுமக்கள் இந்த வைரஸ் தொற்று அதிகம் ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். இந்த வைரசுக்கு சிறப்பு சிகிச்சை ஏதும் இல்லை எனக் குறிப்பிட்டிருக்கும் அவர்கள், தொடர்ந்து விலங்குகளில் சோதனை செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.