இந்தியாவை கதற விட்ட ஆஸி., அணி..! முதல் ஒரு நாள் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!!

மும்பையில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் ஆஸி., அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

 

இந்தியாவுக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் போட்டி தொடரில் ஆஸ்திரேலியா பங்கேற்றுள்ளது. முதலாவது போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸி., கேப்டன் ஆரோன் பிஞ்ச் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனால் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில், ரோகித் சர்மா (10) சோபிக்கத் தவறினார். தவானுடன் லோகேஷ் ராகுல் ஜோடி சேர இருவரும் நிதானமாக ஆடி அணியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்தினர். இருவரும் சேர்ந்து 2-வது விக்கெட்டுக்கு 121 ரன்கள் சேர்த்த நிலையில் ராகுல் (47) அவுட்டானார். அடுத்து தவானும் (74) அவுட்டான இந்திய அணியின் சரிவு தொடங்கியது.

 

ஆஸி.அணியின் பவுலர்கள் நெருக்கடி தர, இந்திய வீரர்கள் சோபிக்கத் தவறினர். கோஹ்லி (16) ஸ்ரேயாஸ் ஐயர் (4), ரிஷப்பான்ட் (28), ஜடேஜா (25), ஷர்குல் தாகூர் (13), குல்தீப் யாதவ் (17), ஷமி (10) ஆகியோர் சொற்ப ரன்களில் அவுட்டாக 49.1 ஓவரில் இந்திய அணி 255 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஸி., தரப்பில் அபாரமாக பந்து வீசிய கம்மின்ஸ (2), ஸ்டார்க் (3) , ரிச்சர்ட்சன் (2) ஆகியோர் இந்திய அணியின் ரன் வேகத்தை கட்டுப்படுத்தினர்.

 

256 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸி., அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான கேப்டன் ஆரோன் பின்ச் மற்றும் டேவிட் வார்னர் இருவரும் இந்திய பந்து வீச்சை கதற விட்டனர். இவர்களின் அதிரடி ஆட்டத்தில் இந்திய பந்து வீச்சு கடைசி வரை எடுபடவில்லை. இந்த ஜோடியை கடைசி வரைக்கும் இந்திய பந்து வீச்சாளர்களால் பிரிக்க முடியவில்லை. அதிரடியாக பவுண்டரி சிக்சர்களை விளாசிய இருவரும் மளமளவென அணியின் ஸ்கோரை உயர்த்தியதுடன் தங்கள் பங்குக்கும் சதம் அடித்து தங்கள் அணிக்கும் எளிய வெற்றியை தேடித் தந்தனர். இதனால் 37.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 258 ரன்கள் எடுத்த இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. வார்னர் 128 ரன்களும், பிஞ்ச் 110 ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

 

இந்த எளிய வெற்றியின் மூலம் 3 போட்டி கொண்ட ஒரு நாள் தொடரில் 1 – 0 என முன்னிலை பெற்றது ஆஸ்திரேலிய அணி. இரண்டாவது ஒரு நாள் போட்டி வரும் 17-ம் தேதி ராஜ்கோட்டில் நடைபெற உள்ளது.


Leave a Reply