அமித் ஷாவுக்கு பதிலாக பாஜக தேசிய தலைவராக ஜே.பி.நட்டா வரும் 20-ந் தேதி பொறுப்பேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாஜகவில் ஒருவருக்கு ஒரு பதவி என்ற விதி உள்ளது. இதனால் கடந்தாண்டு ஜுன் மாதம் உள்துறை அமைச்சர் பொறுப்பேற்றவுடனே பாஜக தேசிய தலைவர் பதவியிலிருந்து அமித்ஷா பதவி விலக வேண்டிய கட்டாய சூழல் ஏற்பட்டது. ஆனால் அமித் ஷாவின் கட்சிக்கு தேவை என பிரதமர் மோடி உள்ளிட்ட சில பாஜக தலைவர்கள் விரும்பியதால், விதிவிலக்காக அமித் ஷா தலைவர் நீடித்தார். அதனால் தான் அப்போது செயல் தலைவர் பதவி புதிதாக உருவாக்கப்பட்டு அந்தப் பதவியில் ஜே.பி.நட்டா நியமிக்கப்பட்டார். அது முதல் அமித்ஷா முக்கிய விவகாரங்களில் மட்டும் அக்கறை காட்ட, மற்றபடி கட்சியின் பிற பணிகள் அனைத்தையும் ஜே.பி.நட்டாவே கவனித்து வந்தார்.
இந்நிலையில் உள்துறை அமைச்சர் என்ற முக்கிய பொறுப்பில் இருப்பதால், பணிச்சுமை காரணமாக அமித் ஷா கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்து விலக முடிவு செய்து விட்டாராம். இதனால் புதிய தலைவராக ஜெ.பி.நட்டாவை நியமிக்கும் முடிவை பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர்கள் ஒரு மனதாக முடிவு செய்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனவே பாஜக தேசிய தலைவராக வரும் 20-ந் தேதி ஜே.பி.நட்டா பதவியேற்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. 56 வயதாகும் ஜே.பி.நட்டா இமாச்சல பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர். அம்மாநிலத்தில் அமைச்சராக இருந்த இவர், கடந்த 2014 – 19 மோடி அரசில் மத்திய அமைச்சராகவும் பதவி வகித்தவர். மேலும் சர்ச்சைகள் எதிலும் சிக்காதவர் என்ற நற்பெயரும் இவருக்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.






