கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த கார் தனியார் பேருந்தின் மீது மோதி அடியில் சிக்கிக்கொண்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
சென்னையில் இருந்து சேலம் நோக்கி புறப்பட்ட கார் உளுந்தூர்பேட்டையை அடுத்த வண்டி பாளையத்தில் உள்ள நான்கு வழி சாலையில் சென்று கொண்டு இருந்தது. அப்போது திடீரென டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி தடுப்பை தாண்டி எதிரே வந்த தனியார் பேருந்தின் மீது மோதி அடியில் சிக்கிக் கொண்டது.

பின்னர் கயிறு மூலம் இழூக்கப்பட்டு தனியார் பேருந்து கீழே சாய்க்கப்பட்டது. காரில் பயணித்த திண்டுக்கல்மாவட்டம் பாலகிருஷ்ணா புரத்தை சேர்ந்த சகோதரிகளான நிஷா, மல்லிகா காரை ஓட்டிய நபர் மற்றும் 3 வயது ஆண் குழந்தையின் சடலங்கள் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு காரில் இருந்து மீட்கப்பட்டன. படுகாயங்களுடன் மீட்கப்பட்டு 5 வயது குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.






