விதி மீறினால் இப்படித்தான்..! கேரளாவில் குண்டு வைத்து நொடியில் தகர்க்கப்பட்ட அடுக்குமாடி கட்டிடங்கள்!!

கேரளாவில் விதிகளுக்கு புறம்பாக கட்டப்பட்டிருந்த 19 மாடிகளைக் கொண்ட வானுயர்ந்த 4 பெரிய அடுக்குமாடி கட்டிடங்கள் குண்டு வைத்து தகர்க்கப்பட்டன.

 

கொச்சியில் மாராடி என்ற பகுதியில் கடற்கரையோரம் அடுத்தடுத்து 4 பிரமாண்ட கட்டிடங்கள் எழுப்பப்பட்டிருந்தன. ஒவ்வொன்றும் 19 மாடிகளைக் கொண்டவை. நவீன வசதிகள் கொண்ட இந்த அடுக்குமாடி குடியிருப்புகளில் 393 குடும்பங்கள் வசித்து வந்தன.

 

10 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த பிரமாண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் கடலோர ஒழுங்கு முறை விதிகளுக்கு புறம்பாக கட்டப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. இதனால் இவற்றை இடிக்க கடலோர ஒழுங்கு முறை ஆணையம் முடிவு செய்தது. ஆனால், வழக்கம் போல சட்டப் பிரச்னையாகி கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. 10 ஆண்டுகளாக சட்டப் போராட்டம் நடந்த நிலையில், இந்த கட்டிடங்களை இடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு போட்டது. இதனால் கட்டிடத்தை குண்டு வைத்து தரைமட்டமாக்கும் பணிக்கான நாள் குறிக்கப்பட்டது.

இதையடுத்து அங்கு குடியிருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டனர். இதில் இரு கட்டிடங்கள் நேற்று குண்டு வைத்து நவீன முறையில் நொடியில் தகர்க்கப்பட்டன. இன்றும் இரு கட்டிடங்கள் தரைமட்டமாக்கப்பட்டன.வெளிநாடுகளில் இது போன்ற கட்டிடங்கள் குண்டு வைத்து தகர்க்கப்படுவது சர்வ சாதாரணம்.

 

ஆனால் இந்தியாவில், இது போன்ற மிகப் பெரிய கட்டிடங்கள் நவீன முறையில் குண்டு வைத்து தகர்க்கப்படுவது இதுதான் முதல் முறை. எனவே இந்த கட்டிட தகர்ப்பைக் காண பொதுமக்கள் பெருமளவில் கூடி விட்டனர். மீடியாக்களும் இந்நிகழ்வை போட்டி போட்டு நேரலையில் ஒளிபரப்பின. கட்டிடங்கள் அப்படியே சமாதியான போது அந்தப் பகுதியே பெரும் தூசி மண்டலமாக காட்சியளித்தது.


Leave a Reply