பூரண உடல் நலம் பெற்று மீண்டும் முழு நேர அரசியலில் ஈடுபடுவேன் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறி, தேமுதிக தொண்டர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த், முக்கிய பண்டிகைகளின் போது பொது மக்களுக்கு பரிசுகளையும் இனிப்பும் வழங்கி கொண்டாடுவதை வாடிக்கையாகக் கொண்டவர். சமீப காலமாக உடல் நலம் குன்றியுள்ள விஜயகாந்த், அரசியலில் முழு வீச்சில் ஈடுபடாவிட்டாலும், பண்டிகைகள் சம்பந்தமான விழாக்களில் தவறாமல் பங்கேற்று வருகிறார்.
தைப்பொங்கல் விழாவை முன்னிட்டு சென்னை கொரட்டூரில் தேமுதிக சார்பில் இன்று பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் பங்கேற்ற விஜயகாந்த், பொதுமக்களுக்கு கரும்பு உள்ளிட்ட பொங்கல் பொருட்களை பரிசாக வழங்கினார்.
பின்னர் விழாவில் பேசிய விஜயகாந்த் திக்கித் திணறி சுருக்கமாக ஓரிரு வார்த்தை மட்டும் பேசினார். அவர் பேசுகையில், தேமுதிக தொண்டர்களுக்கும் தமிழக மக்களுக்கும் எனது பொங்கல் வாழ்த்துக்கள். என் உடல் நலன் மீது அக்கறை கொண்டு பிரார்த்தனை செய்து வரும் தேமுதிக தொண்டர்கள் தான் எனது முதல் கடவுள். நான் விரைவில் பூரண உடல் நலம் பெற்று மீண்டும் வருவேன் என விஜயகாந்த் பேசியதால் தேமுதிக தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.






