--- --:--:-- --

நாகையில் ரூ.650 கோடி போதைப் பொருள் கடத்தல்..!

1

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே ரூ.650 கோடி மதிப்புள்ள மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேருக்கு சர்வதேச கடத்தல் கும்பலுடன் தொடர்பு உள்ளதா என்பது குறித்து மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரக (DRI) அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கைது செய்யப்பட்டுள்ள 4 பேருக்கும் நவம்பர் 10ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.

 

 

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே பிரதாபராமபுரத்தில் 135 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளை மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இச்சம்பவத்தில் த.வெ.க மாவட்டச் செயற்குழு உறுப்பினரும் வழக்கறிஞருமான பூபாலன், சுகன், மணிகண்டன், சதீஷ் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

விசாரணை: கைது செய்யப்பட்ட அனைவரும் நாகை சுங்கத்துறை அலுவலகத்தில் வைத்து 30 மணி நேரத்திற்கும் மேலாக தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். மேலும், வேளாங்கண்ணி காவல் நிலையத்தைச் சேர்ந்த 2 காவலர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

கடந்த செப்டம்பர் மாதம் காரைக்காலில் ரூ.6.08 கோடி மதிப்புள்ள போதைப்பொருளுடன் இலங்கையைச் சேர்ந்தவர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்ட வழக்கிற்கும், தற்போதைய நாகை கடத்தல் வழக்குக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.கைது செய்யப்பட்ட 4 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நவம்பர் 10 வரை நாகை கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பூபாலனின் காரும், பறிமுதல் செய்யப்பட்ட 135 கிலோ போதைப்பொருளும் சுங்கத்துறை அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

 

 

இதனிடையே, கட்சியின் பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாகக் கூறி பூபாலனை தவெக கட்சியிலிருந்து மாவட்டச் செயலாளர் சுகுமாறன் நீக்கியுள்ளார். இருப்பினும், பூபாலனுக்கு நெருக்கமாக இருந்த மாவட்டச் செயலாளர் சுகுமாறனையும் விசாரிக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon