உத்திரபிரதேசத்தில் லாரி மீது மோதிய விபத்தில் பேருந்து தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் பேருந்தில் இருந்த 20 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். உத்தரப் பிரதேசத்தில் பர்காபாத்தில் இருந்து ராஜஸ்தான் ஜெய்ப்பூரை நோக்கி 45 பயணிகளுடன் சொகுசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.
கனோஜ் மாவட்டத்தில் உள்ள சிலோய் பகுதியில் பேருந்து எதிர்பாராதவிதமாக லாரி மீது மோதியது. இதில் பேருந்து தீப்பிடித்து எரிந்தது. பயணிகள் பலரும் வெளியேற முடியாமல் தவித்தனர். சிலர் பேருந்தில் இருந்து குதித்து தப்பினார். இந்த விபத்தில் 20 பேர் வரை உயிரிழந்திருப்பதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் 21 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ஒரு லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாயும் நிவாரணமாக வழங்கப்படும் என்று உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.