ரிலீசான நாளிலேயே இணையத்தில் உலா வரும் தர்பார் ..! தடை விதித்தும் பிரயோஜமில்லை!!

ரஜினியின் தர்பார் படம் ரிலீசான சில மணி நேரத்திலேயே இணைய தளத்தில் வெளியானது. உயர் நீதிமன்றம் தடை விதித்தும் பொருட்படுத்தாமல் இணைய திருடர்கள் அட்டகாசம் செய்துள்ளது படத்தயாரிப்பு நிறுவனத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

 

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவான தர்பார் திரைப்படம் உலகம் முழுவதும் நேற்று ரிலீசானது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் லைகா நிறுவனம் பல கோடி ரூபாய் செலவில் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. போலீஸ் அதிகாரி வேடத்தில் மிடுக்காக தோன்றும் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார் .இப்படத்தைக் காண நேற்று அதிகாலை சிறப்புக் காட்சிக்கு ரஜினி ரசிகர்கள் உற்சாகமாக திரண்டனர். ஆட்டம், பாட்டம் என பட ரிலீசின் போது ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.

 

பிரபலங்களின் படங்கள் என்றாலே, படம் ரிலீசான சில மணி நேரத்தில் இணைய தளத்தில் திருட்டுத்தனமாக வெளியாவது சமீப காலமாக சகஜமாகி விட்டது. இதனால் இணைய தளத்தில் வெளியிட தடை கோரி லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்தது. மேலும் புதிய படங்களை இணையத்தில் திருட்டுத்தனமாக வெளியிடும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இணைய தளங்களின் பட்டியலையும் உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.

 

இந்த வழக்கை நேற்று விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி சத்ய நாராயணா, தர்பார் படத்தை இணையதளத்தில் வெளியிட தடை விதித்தும் உத்தரவிட்டார். ஆனாலும் தர்பார் படம் வெளியான சில மணி நேரங்களிலேயே இணைய தளத்தில் திருட்டுத்தனமாக வெளியாகி படத் தயாரிப்பு தரப்பை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.


Leave a Reply