இந்தியா vs இலங்கை, 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று புனேவில் நடைபெறுகிறது.இந்தப் போட்டியிலும் வென்று தொடரை கைப்பற்றும் முனைப்புடன் இந்தியா களமிறங்குகிறது.
இந்தாண்டு அக்டோபரில் டி20 உலகக் கோப்பை தொடர், ஆஸ்திரேலியாவில் நடக்க உள்ளது. இம்முறை கோப்பையை கைப்பற்றிவிடும் முனைப்பில், கோஹ்லி தலைமையிலான இந்தியப் படை, டி20 போட்டிகளில் தொடர்ந்து சாதித்து வருகிறது.
கடந்தாண்டு இறுதியில் வங்கதேசம், மே.இ.தீவுகளுக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றி இந்தியா சாதனை படைத்துள்ளது.
புத்தாண்டு 2020 பிறந்துள்ள நிலையில், இலங்கை அணியுடன் 3 போட்டி கொண்ட டி20 தொடரில் இந்தியா ஆடி வருகிறது. 5-ந் தேதி கவுகாத்தியில் நடந்த முதல் போட்டி மழையால் ரத்தானது. 7-ந் தேதி இந்தூரில் நடந்த 2-வது போட்டியில் இந்திய தரப்பில் பந்துவீச்சு, பேட்டிங்கில் இந்திய வீரர்கள் சாதிக்க, 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை இந்தியா ருசித்து தொடரில் 1 – 0 என முன்னிலை பெற்றது.
இந்நிலையில் 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி, இன்று இரவு 7 மணிக்கு புனேவில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் வென்றால், 2020-ம் ஆண்டின் முதல் டி20 தொடரை கைப்பற்றிய சாதனை படைக்க இந்திய வீரர்கள் திறமையை வெளிப்படுத்துவார்கள் என எதிர் பார்க்கலாம். அதே வேளையில் அனுபவ வீரர் மலிங்கா தலைமையிலான இலங்கை அணியும் தொடரை சமன் செய்து விட போராடும் என்பதும் நிச்சயமே
இதனால் இன்றைய போட்டியில் வெற்றி பெற இரு அணியினருமே கடும் பலப்பரீட்சை நடத்துவது உறுதி.