--- --:--:-- --

சசிகலா தரப்பு எதிர்ப்புக்கு பணிந்தது தர்பார் படக்குழு..! சர்ச்சைக்குரிய சிறை வசனத்தை நீக்குவதாக திடீர் அறிவிப்பு!!

dfgh

ரஜினியின் தர்பார் படத்தில் இடம் பெற்றுள்ள ஒரு வசனம், சிறையில் உள்ள சசிகலாவை விமர்சிப்பது போல இருப்பதாக பரபரப்பு எழுந்த நிலையில், சசிகலா தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் அந்த வசனத்தை நீக்குவதாக தர்பார் பட தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

 

ரஜினியின் நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவான தர்பார் படம் நேற்று திரைக்கு வந்தது. பிரபல லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில் சிறைக் கைதிகள் பற்றிய ஒரு வசனம் தீயாகப் பரவி தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

இந்தப் படத்தில் ரஜினியிடம் பேசும் போலீஸ் அதிகாரி ஒருவர், இப்போதெல்லாம் சிறைக் கைதிகள் சகஜமாக ஷாப்பிங் செல்கிறார்கள் என்று கூறுவார். இந்த வசனம்,பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை மனதில் வைத்தே எடுக்கப்பட்டதாக பலரும் எளிதில் புரிந்து கொண்டனர். அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் கூட இந்த வசனத்தை வரவேற்றிருந்தார்.

ஆனால், சசிகலா தரப்பிலோ கொந்தளிப்பு ஏற்பட்டு விட்டதாகவே தெரிகிறது. சசிகலா தரப்பு வழக்கறிஞர் செந்தூர் பாண்டியனோ, குறிப்பிட்ட வசனத்தை நீக்க வேண்டும். இல்லாவிட்டால் ரஜினிக்கு எதிராகவும், பட இயக்குநருக்கு எதிராகவும் வழக்கு தொடர்வோம் என எச்சரித்திருந்தார். இதனால் ஏன் வீண் வம்பு என நினைத்த படத்தை தயாரித்த லைகா அந்த வசனம் நீக்கப்படுவதாக அறிவித்துள்ளது.

 

இது தொடர்பாக லைகா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், எங்களின் தர்பார் திரைப்படத்தில், கைதிகள் சிறைச்சாலையை விட்டு வெளியே செல்வதை குறிக்கும் வார்த்தைகள் பொதுவாக எழுதப்பட்ட தே தவிர எந்த ஒரு தனிப்பட்ட நபரையும் குறிக்கவோ அல்லது யார் மனதையும் புண்படுத்தவோ எழுதப்பட்டது அல்ல.

 

இருப்பினும் குறிப்பிட்ட அந்த சில வார்த்தைகள் சிலரது மனதை புண்படுத்துவதாக தெரிய வந்ததால் அது படத்திலிருந்து நீக்கப்படுவதாக தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறி, தடாலடியாக சரண் அடைந்துள்ளது லைகா நிறுவனம்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon