எப்ப சார் கடையை திறப்பீங்க? பொங்கல் பரிசுக்காக காத்திருப்பு..!

தமிழகம் முழுவதும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் பச்சரிசி, சர்க்கரை, ஏலக்காய், கரும்பு துண்டு ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது.

 

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி, நேதாஜி நகர் பகுதியில் உள்ள கூட்டுறவு அங்காடியில் இன்று காலை 9 மணிக்கு பொங்கல் பரிசு தொகுப்பு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று மாலை 7 மணி முதலே கொட்டும் பனியையும், கொசுக்கடியையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

 

இந்தப் பகுதியில் செயல்பட்டுவரும் அங்காடியில் 1500க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் உள்ளதாலும், காலையில் கூட்டம் அதிகமாக காணப்படும் என்பதாலும் முன்கூட்டியே வீட்டிற்கு ஒருவர் என பூட்டிய கடை வாசலில் வரிசை கட்டி அமர்ந்திருந்தனர். இதனை படம் பிடிப்பதை கண்டதும் சிலர் முகத்தை மூடிக் கொண்டனர்.

 

காலையில் விரைவாக கடையை திறந்து பொங்கல் தொகுப்பு வழங்கினால் பெற்றுக்கொண்டு பணிக்கு செல்ல ஏதுவாக இருக்கும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

 

பொங்கல் பரிசு பெறுவதில் மக்கள் காட்டும் ஆர்வம் மக்களின் தேவையை உணர்த்துவதாக இருந்தாலும், ஒரு நாள் தாமதமாக வந்தால் கூட ரேஷன் கடை ஊழியர்கள் பொங்கல் பரிசு பொருட்களை எடுத்துக் கொள்வார்கள் என்கிற அச்ச உணர்வே நள்ளிரவில் மக்கள் காத்திருக்க காரணம் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.


Leave a Reply