தாயின் கண்முன்னே குழந்தை கடத்தல்… 48 மணி நேரத்தில் மீட்பு..!

கரூர் மாவட்டம் பாலத்துறை ஓகே நகரை சேர்ந்த கார்த்திக், விஜயலட்சுமி தம்பதியின் மகன் மிதுன். கடந்த ஜனவரி 5ஆம் தேதி தவிட்டுப்பாளையம், காவிரி ஆற்று பகுதிக்கு கார்த்திக் தம்பதி துணி துவைக்க சென்றுள்ளனர்.

 

அப்போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத நபர் கார்த்திக்குடன் பேச்சு கொடுத்துவிட்டு டாஸ்மாக் கடை எங்கு உள்ளது என கேட்டு அவரையும் அங்கு அழைத்து சென்றுள்ளார். கார்த்திக்கிற்கு அதிகளவில் மதுபானம் வாங்கிக் கொடுத்த அந்த ஆசாமி, அவரை கரூர், சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இறக்கி விட்டுவிட்டு மீண்டும் குழந்தைகள் விளையாடும் இடத்திற்கு வந்துள்ளார்.

 

குழந்தைகளுடன் விளையாடுவது போல் போக்கு காட்டிய அந்த நபர் குழந்தையை தூக்கிக்கொண்டு தப்பியுள்ளார். நீண்ட நேரமாக தேடியும் குழந்தை கிடைக்காததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வேலாயுதம்பாளையம் போலீஸார் விசாரணை நடத்தி வந்துள்ளனர்.

 

இந்நேரத்தில் புதுக்கோட்டை மாவட்டம் பகவான் பட்டியில் சந்தேகிக்கும் படி குழந்தையுடன் சுற்றித்திரிந்த நபரிடம் அந்த பகுதி மக்கள் பேச்சு கொடுத்துள்ளனர்.

 

அப்போது முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்த அந்த நபர் குழந்தையை அங்கேயே விட்டு சென்றதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து அங்கு விரைந்த விராலிமலை போலீசார் குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மேலும் குழந்தையை கடத்திய நபரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.


Leave a Reply