முதுகுளத்தூர் ஒன்றிய கவுன்சிலர் கடத்தப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம்..! வழக்கு தொடர்ந்த கவுன்சிலரின் மகனுக்கு அபராதம்!!

முதுகுளத்தூர் ஒன்றிய 8-வது வார்டு திமுக கவுன்சிலரை அதிமுகவினர் கடத்திச் சென்று விட்டதாக தொடரப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. தாம் கடத்தப்படவில்லை என உயர் நீதிமன்ற மதுரை கிளையில் கவுன்சிலர் சாத்தையா நேரில் ஆஜராகி வாக்குமூலம் கொடுத்ததைத் தொடர்ந்து வழக்குத் தொடர்ந்த அவரது மகனுக்கு நீதிபதிகள் ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

 

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஒன்றிய 8-வது வார்டு கவுன்சிலராக திமுகவைச் சேர்ந்த சாத்தையா என்பவர் வெற்றி பெற்றிருந்தார். அவரை அதிமுகவினர் கடத்தி விட்டதாக அவரது மகன் ராஜா என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.

 

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், சாத்தையாவை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும். தவறும் பட்சத்தில் ராமநாதபுரம் மாவட்ட எஸ்பி ஆஜராக வேண்டும் என கட்டளையட்டு உத்தரவிட்டிருந்தனர்.

 

இந்நிலையில், திமுக ஒன்றிய கவுன்சிலர் சாத்தையா இன்று உயர் நீதிமன்ற கிளையில் ஆஜரானார். தன்னை யாரும் கடத்தவில்லை என்றும் தனது மகள் மற்றும் மருமகனுடன் பாதுகாப்பாக உள்ளதாகவும் வாக்குமூலம் கொடுத்தார்.

 

இதையடுத்து சாத்தையாவின் மகன் ராஜா தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள், பொய்யான வழக்கை தாக்கல் செய்து நீதிமன்ற நேரத்தை வீணடித்ததாகக் கூறி கவுன்சிலர் சாத்தையாவின் மகன் ராஜாவுக்கு ரூபாய் 15 ஆயிரம் அபராதம் விதித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Leave a Reply