திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஒன்றியத்தில் ஒரே வார்டில் இரண்டு பேர் வெற்றி பெற்றதாக சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. நீடாமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட ஆறாவது வார்டில் அதிமுக சார்பில் குமார், திமுக சார்பில் ஜெயபால் உள்ளிட்ட மூன்று பேர் போட்டியிட்டனர்.
இதில் ஜெயபாலனுக்கு 68 வாக்குகளும், குமாருக்கு 50 வாக்குகளும் பதிவாகி இருந்ததால் ஜெயபால் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். அதிமுக வேட்பாளரின் கோரிக்கையை ஏற்று மறு வாக்கு எண்ணிக்கை நடத்துயதிலும் ஜெயபால் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டு அதற்கான சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று ஜெயபால், குமார் இருவரும் பதவி ஏற்பதற்காக விழாவிற்கு வந்ததால் குழப்பம் ஏற்பட்டது. இதனையடுத்து நீடாமங்கலம் ஒன்றிய அலுவலகத்தில் இருவரதும் முன்னிலையிலும் வாக்குகள் மீண்டும் எண்ணப்பட்டன.
அதில் ஜெயபால் 58 வாக்குகளும் குமார் 61 வாக்குகளும் பெற்றிருந்தனர். பின்னர் குமார் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். அலுவலகத்திலேயே அவர் பதவியை ஏற்றுக்கொண்டார். இந்நிலையில் அதிகாரிகள் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் வெற்றி பெற்றதாக கூறி தனக்கு வழங்கப்பட்ட சான்றிதழை அதிகாரிகள் திரும்ப கேட்பதாகவும் ஜெயபால் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.