தமிழகத்தில் 24 பொறியியல் கல்லூரிகள் மிக மோசம்!
தமிழகத்தில் போதிய கல்வித் தரம் மற்றும் செயல்திறன் இல்லாத கல்லூரிகளை அடையாளம் காணுமாறு அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உயர்கல்வித் துறை அறிவுறுத்தி இருப்பதாகவும், கல்லூரிகளின் செயல்பாடுகளை ஆய்வு செய்து, அவற்றின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதே இதன் நோக்கமாகும் என்றும் டி.டி.நெக்ஸ்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் செமஸ்டர் தேர்வு முடிவுகளை ஆய்வு செய்ததில், 2021 நவம்பர்–டிசம்பர் முதல் 2025 நவம்பர்–டிசம்பர் வரையிலான நான்கு ஆண்டுகளில், தமிழகத்தில் உள்ள 24 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர்கூட தேர்ச்சி பெறவில்லை என்பது தெரியவந்துள்ளது. இந்தக் கல்லூரிகளைச் சேர்ந்த மொத்தம் 2,425 மாணவர்கள் தேர்வெழுதியுள்ளனர்.
அவர்களில் முதல், மூன்றாவது மற்றும் ஐந்தாவது செமஸ்டர்களில் 1,394 பேரும், இரண்டாவது, நான்காவது மற்றும் ஆறாவது செமஸ்டர்களில் 1,031 பேரும் தேர்வெழுதியிருந்தனர். ஆனால், இவர்களில் யாரும் தேர்ச்சி பெறவில்லை. மேலும், 177 கல்லூரிகளில் நான்கு ஆண்டுகளில் 50-க்கும் குறைவான மாணவர்களே தேர்ச்சி பெற்றுள்ளனர். இதனால், அக்கல்லூரிகளின் கல்வித் தரம் குறித்த கவலைகள் எழுந்துள்ளன.
தமிழகத்தில் மொத்தம் 418 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் அனுமதிக்கப்பட்ட மாணவர் சேர்க்கை இடங்களின் எண்ணிக்கை 2,53,806 ஆகும். 2026-ஆம் ஆண்டில் கலந்தாய்வு மூலம் 1,99,775 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. இதில், 35 கல்லூரிகளில் மட்டுமே 100 சதவீத மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளது. அதேநேரத்தில், 24 கல்லூரிகளில் அனுமதிக்கப்பட்ட இடங்களில் 10 சதவீதத்துக்கும் குறைவான இடங்களே நிரப்பப்பட்டுள்ளன.
குறைந்த தேர்ச்சி விகிதம் மற்றும் மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள கல்லூரிகளை ஆய்வு செய்ய வேண்டும் என்றும், போதுமான வகுப்பறைகள், ஆய்வகங்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இருப்பதை உறுதி செய்த பிறகே மாணவர் சேர்க்கைக்கு அனுமதிக்க வேண்டும் என்றும் கல்வியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
செயல்பாடு குறைவாக உள்ள கல்லூரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உயர்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ள நிலையில், கல்லூரிகளை நேரடியாக மூடுவதற்கு அண்ணா பல்கலைக்கழகத்துக்கு அதிகாரம் இல்லை எனப் பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கல்லூரிகளை மூடுவது தொடர்பான முடிவுகளை அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் (AICTE) எடுக்க வேண்டும். எனவே, கல்வித் தரம் குறைவாக உள்ள கல்லூரிகளைக் கண்காணிப்பது, மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் பாதுகாப்பது மற்றும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் மீது கவனம் திரும்பியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





