ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற உள்ளாட்சி பிரதிநிதிகள் இன்று பதவியேற்றனர். 11-ந் தேதி நடைபெற உள்ள மறைமுகத் தேர்தலுக்காக, கடத்தப்படுவோமோ? என்ற அச்சத்தில் வார்டு கவுன்சிலர்கள் பலர் பலத்த பாதுகாப்புடன் வந்து பதவியேற்றதும் பல இடங்களில் அரங்கேறியது. சுயேட்சை கவுன்சிலர் ஒருவர் சுவர் ஏறி குதித்த சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிப் பதவி இடங்களுக்கு இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற்று முடிவுகளும் அறிவிக்கப்பட்டது. 27 மாவட்டங்களில் 515 மாவட்ட வார்டு கவுன்சிலர், 5 ஆயிரத்து 90 ஒன்றிய கவுன்சிலர்கள், 9 ஆயிரத்து 624 ஊராட்சித் தலைவர் மற்றும் 76 ஆயிரத்து 746 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது.
இதில் திமுக 243 மாவட்ட ஊராட்சி இடங்களையும், அதிமுக 214 இடங்களையும் கைப்பற்றியது. இதே போல், 2,099 ஒன்றிய வார்டுகளில் திமுகவும், 1,781 இடங்களை அதிமுகவும், கைப்பற்றின. ஊராட்சித் தலைவர் மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் கட்சி சார்பற்ற முறையில் தேர்வு செய்யப்பட்டனர்.
தேர்தலில் வெற்றி பெற்ற அனைவரும் இன்று காலை பதவியேற்றனர். ஊராட்சி தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் அந்தந்த ஊராட்சி மன்ற அலுவலகத்திலும், ஒன்றிய கவுன்சிலர்கள் சம்பந்தப்பட்ட ஒன்றிய அலுவலகத்திலும், மாவட்ட கவுன்சிலர்கள் மாவட்ட கவுன்சில் அலுவலகத்திலும் பதவியேற்றனர்.
வரும் 11-ந் தேதி ஊராட்சி துணைத் தலைவர், ஊராட்சி ஒன்றிய தலைவர் மற்றும் துணைத் தலைவர், மாவட்ட ஊராட்சித் தலைவர் ம்ற்றும் துணைத் தலைவர் பதவியிடங்களுக்கு மறைமுகத் தேர்தல் நடைபெறுகிறது.
இந்த மறைமுகத் தேர்தலில், தற்போது வெற்றி பெற்றுள்ள வார்டு கவுன்சிலர்களே வாக்களித்து சம்பந்தப்பட்ட நிர்வாகிகளை தேர்வு செய்ய வேண்டும். இதனால் வார்டு கவுன்சிலர்களுக்கு மவுசு அதிகரித்துள்ளது. இவர்களின் ஆதரவை பெறுவதற்காக தேர்தலில் போட்டியிடுவோர், கவுன்சிலர்களை கடத்த முயற்சிக்கலாம் என தகவல்கள் வெளியாகின.
இதையடுத்து பெரும்பாலான கவுன்சிலர்கள் பலத்த பாதுகாப்புடன் வந்து பதவியேற்றனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஒன்றியத்தில், சுயேட்சையாக வெற்றி பெற்று ஒன்றிய கவுன்சிலராக வெற்றி பெற்ற பொறியியல் பட்டதாரியான அரவிந்த் என்ற இளைஞர் இன்று பதவியேற்றார்.அவரை கடத்த ஒரு கும்பல் தயாராக இருந்ததைக் கண்டு, அலுவலகத்தின் பின்பக்கமாக சுவர் ஏறிக் குதித்து தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.