அமெரிக்க நிபுணர்கள் மூலம் தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி…! அமைச்சர் செங்கோட்டையன் தகவல்!!

தமிழக மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் அதிக அளவில் இடம் பெறச் செய்யும் வகையில், நீட் தேர்வு பயிற்சியளிக்க அமெரிக்காவில் இருந்து நிபுணர்கள் வர உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

 

மருத்துவப் படிப்பில் சேர, தேசிய அளவில் நடத்தப்படும் நீட் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயம் கொண்டு வரப்பட்டது.இந்த நீட் தேர்வால் பொதுத் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுத்த தமிழக மாணவர்கள் பலர் பாதிக்கப்பட்டு, அவர்களின் மருத்துவப் படிப்பு என்பது கனவாகி விட்டது.

 

இதனால் தமிழகத்தில் நீட் தேர்வுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பி, இந்த முறையை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

 

.ஆனால், ஆளும் அதிமுக அரசோ, நீட் தேர்வு வேண்டாம் என மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்காமல், வலியுறுத்துவதாகவே தீர்மானம் நிறைவேற்றி வருகிறது. மற்றொரு பக்கம் நீட் தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்த, பயிற்சி மையங்களை அரசே தொடங்கும் எனவும் கூறி வருகிறது.

 

இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் விழாவில் பங்கேற்ற பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன், நீட் தேர்வுக்கு பயிற்சியளிக்க அமெரிக்காவைச் சேர்ந்த நிபுணர்கள் , தமிழகம் வர உள்ளதாக தெரிவித்தார். அத்துடன் இந்தியாவிலேயே அனைத்து துறையிலும் முன்னேறிய மாநிலமாக தமிழகம் திகழ்வதாகவும் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.


Leave a Reply