தீபாவளிக்கு விஜய் நடிப்பில் பிகில் திரைப்படம் வெளியீட்டின் போது, ரசிகர்கள் வன்முறையில் ஈடுபட்டதை காரணம் காட்டி, ரஜினியின் தர்பார் திரைப்படத்தை கிருஷ்ணகிரி மண்டலத்தில் மட்டும் ரசிகர் மன்ற சிறப்புக் காட்சியாக வெளியிட தடை விதித்துள்ளது காவல்துறை .
கடந்த தீபாவளிக்கு விஜய் நடித்த பிகில் திரைப்படம் வெளியிடப்பட்டது. இதற்கான ரசிகர் மன்ற சிறப்புக் காட்சிகளும் நள்ளிரவில் திரையிடப்பட்டன. கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு தியேட்டரில் ரசிகர் காட்சி திரையிட தாமதமானதால், விஜய் ரசிகர்கள் ரகளை செய்து வன்முறையில் ஈடுபட்டனர். நள்ளிரவில் அடைக்கப்பட்டிருந்த கடைகளை அடித்து நொறுக்கியும், பொருட்களுக்கு தீ வைத்து எரித்து வன்முறையில் ஈடுபட்ட ரசிகர்கள் பலரை தேடிப் பிடித்து போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், வரும் 9-ந் தேதி ரஜினியின் தர்பார் திரைப்படம் திரைக்கு வருகிறது. இப்படத்தினை ரஜினியின் ரசிகர்களுக்காக சிறப்புக் காட்சிகளை திரையிடவும் ஏற்பாடுகள் நடந்து வருகிறது. ஆனால் கிருஷ்ணகிரி மண்டலத்தில் உள்ள தியேட்டர்களில் மட்டும் சிறப்புக் காட்சிக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. பிகில் திரைப்பட வெளியீட்டின் போது விஜய் ரசிகர்கள் வன்முறையில் ஈடுபட்டதை காரணம் காட்டி, தர்பார் பட சிறப்புக் காட்சிக்கு கிருஷ்ணகிரி மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் குமரன் அனுமதி மறுத்துள்ளார். இதனால் விஜய் ரசிகர்கள் செய்த கலாட்டாவிற்கு எங்களை பழிவாங்குவதா..? என கிருஷ்ணகிரி மாவட்ட ரஜினி ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர்.