ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர்களை தேசவிரோதிகள் என மத்திய அரசை சேர்ந்த யாரும் அழைக்கவில்லை என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
டெல்லியில் ஊடகங்கள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் முன்னாள் முதலமைச்சரான பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மற்றும் மெகபூபா முப்தி ஆகிய மூவரும் ஆத்திரமூட்டும் வகையில் பேசியதால் தான் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு இருப்பதாக கூறினார்.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370-வது பிரிவின் மேல் கை வைத்தால் நாடு பற்றி எரியும் என்று அவர்கள் 3 பேரும் பேசி அதன் காரணமாகவே வீட்டுக்காவலில் வைக்க முடிவு எடுக்கப்பட்டதாக அமித் ஷா தெரிவித்தார். ஒரு காலத்தில் பாரதிய ஜனதாவின் கூட்டணியில் இருந்த தேசிய மாநாட்டுக் கட்சி மற்றும் மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர்களை தேசவிரோதிகள் என்று அழைப்பது எப்படி சரியாகும் என அமித்ஷாவிடம் செய்தியாளர்கள் வினவினார்.
அதற்கு தானோ, மத்திய அமைச்சரை சேர்ந்த யாரோ அவர்களை அவ்வாறு அழைத்ததில்லை என பதிலளித்தார். வீட்டு காவலில் வைக்கப்பட்டிருக்கும் மூன்று முன்னாள் முதலமைச்சர் களையும் எப்போது விடுவிப்பது என்பது குறித்து ஜம்மு காஷ்மீர் நிர்வாகம்தான் முடிவெடுக்குமே தவிர நான் அல்ல என விளக்கமளித்தார் அமித் ஷா.