ராஜஸ்தானில் ஒரே மாதத்தில் 100 குழந்தைகள் உயிரிழப்பு

ராஜஸ்தான் மாநிலம் கோடா அரசு மருத்துவமனையில் மேலும் ஒன்பது பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் ராஜஸ்தான் அரசுக்கு அனைத்து விதத்திலும் மத்திய அரசு உதவிகளை செய்யும் என சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.

 

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா பகுதியில் உள்ள ஜே கே அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் தொடர்ந்து உயிரிழப்பதாக புகார்கள் எழுந்தன. இதனையடுத்து அரசு சார்பில் விசாரணை குழு அமைக்கப்பட்டு இதுதொடர்பாக விசாரணை நடைபெற்றது. இதில் டிசம்பர் மாதத்தில் மட்டும் நாளொன்றுக்கு சராசரியாக 3 பச்சிளம் குழந்தைகள் வீதம், நூறு குழந்தைகள் உயிரிழந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

 

முதற்கட்ட விசாரணையின்படி ஆக்சிஜன் பற்றாக்குறை, பராமரிப்பின்மை, நோய்த்தொற்று, இன்குபேட்டர் இல்லாதது போன்ற காரணங்களால் குழந்தைகள் உயிரிழந்தது தெரிய வந்துள்ளது. இந்நிலையில் மருத்துவமனையில் தலைமை மருத்துவர் மாற்றம் செய்யப்பட்டு இந்த சம்பவம் குறித்து விசாரிப்பதற்காக மூன்று மருத்துவர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

 

இதற்கிடையில் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக்கிற்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கடிதம் எழுதியுள்ளார், அதில் குழந்தைகள் உயிரிழப்பை தடுக்க கவனம் செலுத்துமாறும் எதிர்காலத்தில் குழந்தைகள் உயிர் இழப்பை தடுப்பது குறித்து ஆய்வு செய்யுமாறும் குறிப்பிட்டுள்ளார். மத்திய அரசு தேவையான உதவிகளை அளிக்க தயாராக இருப்பதாகவும் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.

 

இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ராஜஸ்தான் மாநில கட்சி பொறுப்பாளர் அபினேஷ் பாண்டேவை சந்தித்து குழந்தைகளின் இறப்பு குறித்து கேட்டறிந்தார். மேலும் இது தொடர்பாக துரித நடவடிக்கை எடுக்குமாறு மாநில முதலமைச்சருக்கு சோனியா காந்தி அறிவுறுத்தியுள்ளார்.


Leave a Reply