உள்ளாட்சி தேர்தல்: நாளை வாக்கு எண்ணிக்கை..! தில்லுமுல்லு, அத்துமீறல் நடக்கலாம் என அதிமுக, திமுக மாறி, மாறி ‘பகீர்’ புகார்..!!

ஊரக உள்ளாட்சிப் பதவிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன. வாக்கு எண்ணிக்கையில் திமுகவினர் தில்லு முல்லு செய்வார்கள் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், ஆளும் கட்சிக்கு ஆதரவாக அதிகாரிகள் அத்துமீறலாம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் பரஸ்பரம் குற்றம்சாட்டி தங்கள் கட்சியினரை உஷார்படுத்தியுள்ளனர்.

 

தமிழகத்தில், 27 மாவட்டங்களில் ஊரகப் பகுதிகளில் உள்ள உள்ளாட்சி அமைப்பு பதவிகளுக்கு, கடந்த 27, 30 ஆகிய தேதிகளில் இரு கட்டமாக வாக்குப்பதிவு நடந்தது. ஊராட்சித் தலைவர், வார்டு உறுப்பினர், ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் என மொத்தம் 91 ஆயிரத்து 375 பதவிகளுக்கு நடந்த தேர்தலில், முதல் கட்டத்தில் 76.19 சதவீதமும், 2-ம் கட்டத்தில் 77.73 சதவீதமும் வாக்குகள் பதிவானது.

 

வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் 315 மையங்களில் மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது.இந்த உள்ளாட்சித் தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டம் மேல்புறம் ஒன்றியத்தில் மட்டும் சோதனை முயற்சியாக ஓட்டுப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. இதனால் இங்கு மட்டும் ஓரிரு மணி நேரத்தில் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்து முடிவுகள் முதலில் வெளியாக வாய்ப்புள்ளது.

மற்ற 314 ஒன்றியங்களில் வாக்குச் சீட்டு முறையில் ஒவ்வொருவரும் 4 வாக்குகள் பதிவிட்டு ஒரே பெட்டியில் போட்டதால், அவற்றை தனித்தனியாக பிரித்த பின் வாக்குகள் எண்ணப்பட உள்ளதால், முழு முடிவுகள் வெளியாக நாளை நள்ளிரவாகிவிடும் எனத் தெரிகிறது.

 

இதற்கிடையே நாளை வாக்கு எண்ணிக்கையின் போது தங்கள் கட்சியினர், கண்காணிப்பதில் உஷாராய் இருக்குமாறு அதிமுகவும், திமுகவும் எச்சரிக்கை விடுத்துள்ளன. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஓட்டு எண்ணிக்கையின் போது திமுகவினரால் ஏதேனும் தில்லு முல்லு நடத்தப்படுகிறதா? என்பதை அதிமுக ஏஜன்டுகள் விழிப்போடு கண்காணிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

 

இதே போல், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஓட்டு எண்ணிக்கையின் போது, சட்ட விதிகள் கடைப்பிடிக்கப்படுகிறதா? என கவனித்து ஆளும் கட்சியினரின் அத்துமீறல்களை தடுக்க வேண்டியது அவசியம் என திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் ஏஜன்ட்களை உஷார்படுத்தியுள்ளார்.


Leave a Reply