ஆண்டுதோறும் வழங்கப்படும் மாநில மொழிக்கான சாகித்ய அகாதமி விருது, தமிழில் சூல் என்ற நாவலை எழுதிய பிரபல எழுத்தாளர் சோ.தர்மனுக்கு கிடைத்துள்ளது.
நாவல், சிறுகதை, நாடகம் போன்ற இலக்கியப் படைப்புகளுக்கு இந்தியாவில் வழங்கப்படும் மிக உயர்ந்த விருதுகளில் சாகித்ய அகாதமி முக்கியமானது.தேசிய அளவில் சிறந்த படைப்புக்கும், இந்தியாவில் உள்ள 24 மொழிகளில் சிறந்த படைப்புகளுக்கும் இந்த விருது ஆண்டு தோறும் வழங்கப்படுவது வழக்கம்.
2019-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாதமி விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. இதில் தமிழில் சிறந்த படைப்பாக சூல் என்ற நாவல் தேர்வு செய்யப்பட்டு, அதனை எழுதிய பிரபல எழுத்தாளர் சோ.தர்மனுக்கு சாகித்ய அகாதமி விருது கிடைத்துள்ளது.சோ. தர்மனின் இயற்பெயர் சோ.தர்மராஜ். கோவில்பட்டியை . அடுத்த உருளைகுடியைச் சேர்ந்த இவர் சோ.தர்மன் என்ற புனைப்பெயரில் சிறுகதை, நாவல்கள் எழுதி வருகிறார்.
இதுவரை 7 நாவல்களை எழுதியுள்ள இவர், தமிழகத்தின் தென் மாவட்ட மக்களின் வாழ்வியல் முறை பற்றி விவரிக்கும் வகையில் சூல் என்ற நாவலை எழுதியிருந்தார். அந்த நாவலுக்குத் தான் இப்போது சாகித்ய அகாதமி விருது கிடைத்துள்ளது. ஏற்கனவே இவர் எழுதிய கூகை என்ற நாவலுக்கு தமிழக அரசின் விருதும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.