‘ரேப் இன் இந்தியா’ என்று தாம் கூறிய கருத்தில் இருந்து செத்தாலும் பின் வாங்கப் போவதில்லை. மன்னிப்புக் கோர நான் ஒன்றும் சாவர்க்கர் இல்லை என்று ராகுல் காந்தி பேசியுள்ளது, பாஜகவினரை மேலும் கொந்தளிக்கச் செய்துள்ளது.
நாட்டில் நடக்கும் பாலியல் குற்றங்களை குறிப்பிட்டு கருத்து தெரிவித்திருந்த ராகுல் காந்தி, பிரதமர் மோடியை கடுமையாக சாடியிருந்தார்.மேக் இன் இந்தியா என மோடி பெருமை கொள்கிறார். ஆனால் ரேப் இன் இந்தியா வாகி விட்டது என்று ராகுல் காந்தி விமர்சித்ததற்கு பாஜக பெண் எம்.பிக்கள் மக்களவையில் கொந்தளித்தனர்.
ராகுல் காந்தி மன்னிப்புக் கோர வேண்டும் என பாஜக பெண் எம்.பி.க்கள் கூச்சலிட்டு அமளியில் ஈடுபட்டதால், நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன. இதற்கு பதிலளிக்கும் விதமாக, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில் நடக்கும் போராட்டங்களை திசை திருப்பப் பார்க்கிறது பாஜக என ராகுல்காந்தி கூறியிருந்தார். அத்துடன் ரேப் இன் இந்தியா என்று தாம் கூறியதற்கு மன்னிப்பு கோரவும் மாட்டேன் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் டெல்லியில் இன்று காங்கிரஸ் சார்பில் தேசம் காப்போம் என்ற பிரமாண்ட பேரணியும் பொதுக் கூட்டமும் நடைபெற்றது.இதில் பேசிய ராகுல் காந்தி, பாஜகவையும், ஆர்.எஸ்.எஸ்.சையும் கடுமையாக வசை பாடினார். அத்துடன், ரேப் இன் இந்தியா என்று தாம் கூறிய கருத்தில் இருந்து ஒரு போதும் பின் வாங்க மாட்டேன். செத்தாலும் சாவேனே தவிர ஒரு போதும் மன்னிப்பும் கோரமாட்டேன்.
மன்னிப்பு கோருவதற்கு என் பெயர் ஒன்றும் ராகுல் சாவர்க்கர் அல்ல. நான் ராகுல் காந்தி என்று ஆவேசமாக கூறிய அவர், நாட்டை சீர்குலைத்ததற்காக பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் தான் மன்னிப்புக் கேட்க வேண்டியவர்கள் என்றார்.
ஆர்எஸ்எஸ் முன்னோடிகளில் ஒருவரான சாவர்க்கர், சுதந்திரப் போராட்டத்தின் போது கைது செய்யப்பட்டு அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.தாம் முன்கூட்டி விடுதலையாவதற்காக, ஆங்கிலேய அரசிடம் சாவர்க்கர் மன்னிப்பு கேட்டதாக கூறப்படுவதுண்டு. இதை சுட்டிக்காட்டி ராகுல் காந்தி பேசியது, பாஜகவினரை இப்போது மேலும் கொந்தளிக்கச் செய்துள்ளது.