சென்னையில் இன்று இந்தியா Vs மே.இ.தீவுகள் ஒரு நாள் போட்டி..! மழையால் போட்டி தடைபடுமா..? வானிலை நிலவரம் எப்படி..?
இந்தியா மற்றும் மே.இ.தீவுகள் மோதும் முதலாவது ஒரு நாள் போட்டி சென்னையில் இன்று நடைபெறுகிறது. அவ்வப்போது மழை பெய்ய வாய்ப்புள்ளதால் போட்டி பாதிக்கப்படுமோ? என ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர்.
இந்தியா வந்துள்ள மே.இ.தீவுகள் கிரிக்கெட் அணி, முதலில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது.இந்தத் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா வென்று சாதித்தது.
இந்நிலையில், இரு அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் போட்டி இன்று நடைபெறுகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கி பகலிரவு போட்டியாக நடைபெறுகிறது. 2 ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் சென்னையில் ஒரு நாள் போட்டி நடைபெறுவதால், போட்டியைக் காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். இதனால் போட்டிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்துள்ளன.
ஆனால்,கடந்த சில நாட்களாக சென்னையில் விட்டு விட்டு மழை பெய்து வருவதால் இன்றைய போட்டி மழையால் பாதிக்கப்படுமோ? என ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர். நேற்று பகல் முழுவதும் விட்டு, விட்டு மழை பெய்ததால் இரு அணி வீரர்களும் பயிற்சியில் ஈடுபடவில்லை.இன்று பகலில் மழை பெய்யும் வாய்ப்பு கம்மிதான் என்றும், மாலை மற்றும் இரவில் விட்டு விட்டு மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை நிலவரம் கூறுகிறது. இதனால் போட்டி முழுமையாக பாதிக்காது என்றும், அவ்வப்போது தடைப்பட வாய்ப்புள்ளதால் டக்வொர்த் லீவிஸ் முறையில் போட்டி முடிவு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்யும் அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்று கூறப்படுகிறது. பொதுவாகவே சேப்பாக்கம் மைதானத்தில் இரவு நேரத்தில் பனிப்பொழிவு காணப்படும் என்பதால் முதலில் பேட்டிங் செய்யும் அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம். கடைசியாக இங்கு நடந்த 7 போட்டிகளில் 6 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணியே வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் இன்றைய போட்டியில் டாஸும் முக்கியப் பங்கு வகிக்கும்.
கடந்த சில வருடங்களாக மே.இ.தீவுகள் அணி மோசமாக விளையாடி தொடர் தோல்விகளை சந்தித்து வந்தது. இந்நிலையில், தற்போது போலார்ட் தலைமையிலான அந்த அணியில் திறமையான வீரர்கள் உள்ளதால் சிறப்பான அணியாக கருதப்படுகிறது. இந்திய அணியிலும் கேப்டன் கோஹ்லி, ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல் ஆகியோர் சிறப்பாக ஆடி வருகின்றனர். இதனால் இன்றைய போட்டியில் மழை குறுக்கிடாத பட்சத்தில் போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்றே தெரிகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




