நாட்டின் முதல் திருநங்கை செவிலியர்!

உலகம் முழுவதும் பாலியல் சிறுபான்மையினர் தங்களது உரிமைக்காக போராடிக் கொண்டிருக்கும் சூழலில் தமிழகத்தை சேர்ந்த திருநங்கை ஒருவர் இந்தியாவின் முதல் செவிலியராகி அசத்தியுள்ளார்.

 

தூத்துக்குடி மாவட்டம் சேர்வைகரன்மடம் கிராமத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி ரத்தின பாண்டி, தேன்மொழி தம்பதியினரின் ஒரே மகனாகப் பிறந்தார் அன்புராஜ். சிறுவயதிலிருந்தே உளவியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பல மாற்றங்களை எதிர்கொண்ட அன்புராஜ் தன்னிடம் பெண் தன்மை இருப்பதை உணர்ந்துள்ளார்.

 

இதனால் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் புறக்கணிப்புக்கு அன்புராஜ் ஆளாகியுள்ளார். ஆனால் மன உறுதியுடன் இருந்த அன்புராஜ் படிப்பில் கவனம் செலுத்தினார். இதனையடுத்து திருநங்கையாக மாறிய அன்புராஜ் தனது பெயரை அன்பு ரூபியாக மாற்றிக் கொண்டார்.

 

இந்த சூழலில் தனது தந்தையை இழந்த அன்பு ரூபிக்கு அவரது தாய் தேன்மொழி பக்கபலமாக இருந்து வந்தார். தாயின் அரவணைப்பால் விடாமுயற்சியாலும் திருநெல்வேலியில் உள்ள நர்சிங் கல்லூரியில் அன்பு ரூபி இளநிலை பட்டப்படிப்பை முடித்தார்.

 

அதை தொடர்ந்து தமிழக அரசின் மருத்துவத் துறை வேலைவாய்ப்பு தேர்வில் பெண்கள் பிரிவில் தேர்ச்சி பெற்ற அன்பு ரூபிக்கு தமிழக அரசு அவரது சொந்த மாவட்டத்தில் செவிலியராக பணிபுரிய ஆணை பிறப்பித்தது.

 

இதனையடுத்து விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் அன்பு ரூபி செவிலியராக பொறுப்பேற்றுக்கொண்டார். சமூகத்தில் பல்வேறு புறக்கணிப்புகளால் ஒடுக்கப்படும் பாலியல் சிறுபான்மையினர், அதிலிருந்து மீண்டுவர உத்வேகம் அளிக்கும் வகையில் அன்புரூபி திகழ்கிறார்.

 

கடும் உழைப்பும், விடாமுயற்சியும் இருந்தால் திருநங்கைகள் தங்கள் வாழ்க்கையில் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு உதாரணமாக திகழ்கிறார் அன்பு ரூபி.


Leave a Reply