வயதான தம்பதிகள் வாய்க்காலில் குதித்து உயிரை மாய்த்துக்கொண்ட அதிர்ச்சி சம்பவம்

திருப்பூர் அருகே கவனித்துக்கொள்ள ஆள் இல்லாததால் வயதான தம்பதி வாய்க்காலில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் பாப்பம்பட்டி சித்தநாயக்கன் பகுதியை சேர்ந்த காளிமுத்து, காப்பாத்தாள் தம்பதிக்கு மூன்று மகள்கள் உள்ளனர்.

 

மூன்று பேருக்கும் திருமணம் ஆன நிலையில் அவர்கள் வெளியூரில் வசித்து வருகின்றனர். சொந்த ஊரில் தனியாக வசித்து வந்த காளிமுத்துவிற்கும், காப்பாத்தாளிக்கும் அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போனதாக கூறப்படுகிறது.

 

கவனிக்க ஆளின்றி வாடிய முதியவர்கள் இருவரும் சோகத்தில் இருந்ததாக தெரிகிறது. நேற்று முன்தினம் மருத்துவமனைக்கு செல்வதாக கூறி சென்ற இருவரும் பிற்பகல் வரை வீடு திரும்பாததால் அக்கம்பக்கத்தினர் அவர்களது மகள்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

 

பெற்றோரை தேடி அலைந்த மகள்களும் அவர்களது உறவினர்கள் திருப்பூர் மாவட்டம் கொல்லம்பாளையம் அருகேயுள்ள பிஏபி வாய்க்காலில் முதியவர்கள் இருவரும் சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

 

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் இருவரது உடல்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வயது முதிர்ந்த நிலையில் கவனிக்காததால் முதியவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Leave a Reply