கேரளாவில் கஞ்சா விற்பனை செய்து வந்த இளைஞர் காவலர்களிடம் பிடிபட்டு கை விலங்கு மாட்டப்பட்ட நிலையிலும் இரண்டுமுறை தப்பியோட முயன்றார்.
கேரளாவின் பல்வேறு பகுதிகளில் பள்ளி, கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை செய்து வரும் கும்பலை பிடிக்க காவல்துறை முனைப்பு காட்டி வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருட்டு வழக்குகளில் தொடர்புடைய கோட்டை மாவட்டத்தை சேர்ந்த கோகுல் என்பவர் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக தெரியவந்ததையடுத்து காவல்துறை அவரை தேடி வந்தது.
திருவனந்தபுரத்தில் நொய்யற்றாகரை என்ற இடத்தில் காவலர்கள் அவரை பிடித்தனர். கோகுல் பையில் வைத்திருந்த 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. எனினும் கை விலங்கு பூட்டப்பட்டு இருந்த நிலையில் அவர்களிடமிருந்து தப்பிய கோகுல் குடியிருப்புகளில் புகுந்து ஒரு குளியல் அறையில் பதுங்கி இருந்தார்.
அந்த பகுதி முழுவதும் தேடிய காவல்துறை பொதுமக்களின் உதவியுடன் கோகுலை பிடித்தனர். காவலர்களுடன் வாகனத்தில் ஏற்ற முயன்றபோது மீண்டும் தப்பியோட முயன்றார். எனினும் காவல்துறையினர் கோகுலை பிடித்து சென்றனர்.