சிறார் ஆபாச படங்களை பார்ப்பதை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக போலீசார் அறிவித்திருக்கிறார்கள். இதனைப் பயன்படுத்தியே இளைஞர்களிடம் பணம் பறிக்க களமிறங்கி இருக்கிறது ஒரு கும்பல்.
தமிழகத்தில் சிறார் ஆபாச படம் பார்ப்பவர்களின் பட்டியல் தயாராக இருப்பதாகவும், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் பிரிவு கூடுதல் காவல் துறை இயக்குனர் ரவி அண்மையில் தெரிவித்திருந்தார்.
தமிழகத்தில் ஆபாச படம் பார்ப்பவர்களின் 3000 பேர் கொண்ட பெயர்களின் பட்டியல் தயாராக உள்ளதாகவும் மாவட்ட வாரியாக பிரிக்கப்பட்டு தகவல் அறிக்கை பதிவு செய்த பின்பு முறையாக அழைத்து விசாரிக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறியிருந்தார்.
சிறார் ஆபாச படங்கள் பார்ப்பதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை போலீசார் தொடங்கிய நிலையில் அதனை பயன்படுத்தி சிலர் மோசடியில் ஈடுபட தொடங்கியுள்ளது போலீசாரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. நெல்லை மாவட்டத்தில் ஒரு பகுதியில்தான் இந்த நூதன மோசடி நடைபெற்றுள்ளது.
கல்லூரி மாணவர்களை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொள்ளும் மர்ம நபர்கள் இருவர் தாங்கள் போலீஸ் என கூறி ஆபாச படங்களை பார்ப்பதற்காக 7 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என மிரட்டி வரும் தகவல்கள் வெளியாகின.
ஆனால் காவல் துறையில் இருந்து இப்படி எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என மறுப்பு தெரிவித்த போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்ட போது அந்த பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் கல்லூரி மாணவர் ஒருவரை மிரட்டி வருவது தெரியவந்துள்ளது.
இதையடுத்து கார்த்திகேயன் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அவரை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டனர். அவர் சென்னைக்கு தப்பி சென்றுவிட்டதாக தகவல் கிடைத்துள்ளதால் போலீசாரும் சென்னை விரைந்துள்ளனர்.
இதற்கிடையே தனிப்பட்ட முறையில் போனில் தொடர்பு கொண்டு போலீசார் யாரும் விசாரணை நடத்த மாட்டார்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே பொதுமக்கள் இந்த விவகாரத்தில் எச்சரிக்கையுடன் மட்டுமல்ல சுய கட்டுப்பாட்டுடன் இருப்பது அவசியம்.