இப்படி ஒரு திருட்டுப்பயலை நீங்கள் இதுவரை பார்த்திருக்கமாட்டீர்கள்
சேலம் பாகல்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சப்பானி என்கிற ஐயன் துறை. திருட்டை மட்டுமே தொழிலாக கொண்ட இவர் கடந்த 1990ஆம் ஆண்டு முதல் பல்வேறு திருட்டு வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்று வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
இவர் மீது சேலம், கோயம்புத்தூர், நாமக்கல் உள்ளிட்ட பல காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட ஐயன் துறை ஒரு மாதத்திற்கு முன்னர் தான் ஜாமினில் விடுதலையாகி வந்துள்ளார்.
சற்றும் தாமதிக்காமல் உடனடியாக தொழிலில் இறங்கிய அவர் சேலத்தில் உள்ள பல்வேறு வீதிகளில் இரவு நேரத்தில் திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளார். பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையங்களில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சேலம் மாநகர காவல் உதவி ஆணையாளர் செந்தில் தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இந்நிலையில் கண்டம்பட்டி ஆர்டிஓ அலுவலகம் எதிரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றித்திரிந்த ஐயன் துறையை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் சேலத்தில் தொடர்ந்து வீடுகளில் புகுந்து திருட்டில் ஈடுபடுவது தெரிய வந்தது.
கோவை மத்திய சிறையில் இருந்து வெளியே வந்த நாற்பது நாட்களிலேயே 6 இரு சக்கர வாகனம், பத்து சவரன் தங்க நகைகள், ஒரு ஐம்பொன் முருகன் சிலை, எழுபது ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் 2 செல்போன்கள் ஆகியவற்றை அவர் திருடியதும் தெரிய வந்தது.
ஐயன் துறை போலீசாரிடம் அவர் அளித்த வாக்குமூலத்தில் திருடுவது ஒன்றில் மட்டுமே தொழிலாக கொண்ட தமக்கு ஒருநாள் திருடவில்லை என்றாலோ, சென்ற இடத்தில் திருட முடியாமல் போனாலோ மனது உறுத்தலாக இருக்கும் என்றும், அன்றைய இரவு திருடா விட்டால் தூக்கம் வராது என்றும் கூறி அதிர வைத்துள்ளார்.
திருடச் செல்லும் வீட்டில் நாய் இருந்தால் அதற்கு சிக்கன் அல்லது முட்டை பொடிமாஸ் வாங்கி கொடுத்துவிட்டு திருடுவதை வழக்கமாக கொண்டிருப்பதால் வீட்டில் நாய் இருந்தாலும் தமக்கு கவலை இல்லை என போலீசாரிடம் ஐயன் துறை தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




