டெல்லி நிர்பயா பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளை தூக்கிலிடும் பணிக்கு விருப்பம் தெரிவித்து இராமநாதபுரம் தலைமை காவலர் ஒருவர் கடிதம் எழுதியிருக்கிறார். டெல்லியில் கடந்த 2012 ஆம் ஆண்டு ஓடும் பேருந்தில் மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.
இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை நிகழ்த்தியவர்களை தூக்கிலிடுவது உறுதியாகியுள்ளது.
இந்த நிலையும் நிர்பயா வழக்கு குற்றவாளிகள் இருக்கும் திகார் சிறையில் தூக்கிலிடுபவர் பணிக்கு ராமநாதபுரம் மாவட்ட காவல் பணியிடைப் பயிற்சி மையத் தலைமை காவலர் சுபாஷ் ஸ்ரீனிவாசன் விண்ணப்பம் செய்திருக்கிறார். அவர் சிறையில் இயக்குனருக்கு கடிதம் மூலம் தனது கோரிக்கையை அனுப்பியிருக்கிறார்.
நிர்பயா வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்ற நோக்கத்தில்தான் அந்த பணியை செய்ய விருப்பம் தெரிவித்திருக்கிறார். இதற்காக தனக்கு ஊதியம் எதுவும் தர வேண்டாம் என்று கடிதத்தில் சுபாஷ் ஸ்ரீனிவாசன் குறிப்பிட்டிருக்கிறார்.