கந்து வட்டிக் கொடுமையால் பால் வியாபாரி மனைவியுடன் தற்கொலை

சேலத்தில் மகளின் திருமணத்திற்காக வட்டிக்கு வாங்கிய கடனை கட்ட முடியாத காரணத்தால் பால் வியாபாரி மனைவியுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சேலம் ரெட்டிபட்டியைச் சேர்ந்த மணி என்பவர் பால் வியாபாரம் செய்து வந்தார்.

 

இவர் கந்துவட்டிக்கு 5 லட்சம் ரூபாய் கடன் வாங்கி தனது இரண்டாவது மகளுக்கு திருமணம் செய்து வைத்தார். பின்னர் கடனை திருப்பித் தர முடியாத காரணத்தால் கடன் கொடுத்தவர்கள் மணியின் வீட்டிற்கு வந்து தகராறு செய்துள்ளனர்.

 

நேற்று முன்தினம் மணியின் வீட்டை கடன் கொடுத்தவர்கள் பூட்டி சாவியை எடுத்துச் சென்றதாகவும், பின்னர் பணத்தை திரும்பி கொடுத்து விடுவதாகவும் கூறி மணி சாவியை திரும்பப் பெற்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று காலை மணியின் வீடு நீண்ட நேரமாக உள்பக்கம் பூட்டி கிடந்துள்ளது.

 

இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மணியும் அவரது மனைவியும் தூக்கில் தொங்கியபடி சடலமாக கிடந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சூரமங்கலம் போலீசார் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.


Leave a Reply