திருவண்ணாமலையில் இன்று மகாதீபம் திருவிழா நடைபெற உள்ள நிலையில் நகரம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. திருவண்ணாமலையில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா கடந்த ஒன்றாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான பரணிதீபம் இன்று அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் கோயிலில் ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு கோயிலின் பின்புறம் 2668 அடி உயரம் கொண்ட மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படுகிறது.
மலை மீது மகா தீபம் ஏற்றப் பயன்படும் 200 கிலோ எடையும், ஆறு அடி உயரமும் கொண்ட கொப்பரையை கோவில் ஊழியர்கள் தலைச்சுமையாக மலை உச்சிக்கு கொண்டு சென்றனர். தீபம் ஏற்றுவதற்காக 3 ஆயிரத்து 500 கிலோ நெய் 1000 மீட்டர் திரியை ஏற்ற காடாத்துணி போன்றவை பயன்படுத்தப்படுகிறது.
கார்த்திகை தீபத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தருவதால் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு இருக்கின்றன. 225 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன.
அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 2600 சிறப்பு பேருந்துகள் மூன்று நாட்களுக்கு இயக்கப்படுகின்றன. இவைதவிர 22 சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகின்றன. பக்தர்களின் பாதுகாப்பிற்காக 8500 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளன.