உப்பு மூட்டைகளுக்கு அடியில் பதுக்கி வைத்து நூதன முறையில் கேரளாவுக்கு கடத்த முயன்ற 15 டன் ரேஷன் அரிசி பறிமுதல்.ஒருவர் கைது !!!

பொள்ளாச்சி அருகே கோபாலபுரம் சோதனைச்சாவடி சாவடியில் உப்பு மூட்டைகளுக்கு அடியில் பதுக்கி வைத்து நூதன முறையில் கேரளாவுக்கு கடத்த முயன்ற 15 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்து,பிரசாத் என்பவரை கைது செய்து தாலுகா காவல் நிலைய போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

 

பொது வினியோகத் திட்டத்தின் கீழ் ஏழை எளிய மக்களுக்கு நியாய விலைக் கடைகளில் இலவசமாக வழங்கப்படும் அரிசியை கடத்தல் கும்பல் கேரள மாநிலத்துக்கு லாரிகள் மூலமாக நூதன முறையில் கடத்தி வரும் சம்பவங்கள் தொடர் கதையாக உள்ளது. இந்நிலையில் கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கோபாலபுரம் சோதனைச் சாவடியில் தாலுகா போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது,அவ்வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனையிட்டனர். லாரியின் மேல் புறத்தில் உப்பு மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.

சந்தேகம் அடைந்த போலீசார் ஆய்வு மேற்கொண்ட போது உப்பு மூட்டைகளுக்கு கீழ்ப்புறத்தில் ரேஷன் அரிசி மூட்டைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர்,அதில் இருந்த 15 டன் ரேஷன் அரிசி மற்றும் லாரியை பறிமுதல் செய்த போலீசார் லாரி ஓட்டுனரான கேரள மாநிலத்தைச் சேர்ந்த பிரசாத் என்பவரை கைது செய்தனர்.

 

விசாரணையில் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து ரேஷன் அரிசியை சேகரித்து கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்திற்கு நூதன முறையில் கடத்த முற்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

 

உப்பு மூட்டைகளுக்கு அடியில் பதுக்கி வைத்து நூதன முறையில் கேரளாவுக்கு கடத்த முயன்ற 15 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Leave a Reply