வெங்காய விலை உயர்வை கண்டித்து மாதர் சங்கத்தினர் ஒப்பாரி வைத்து நூதன கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை பார்க் வீதியில் உள்ள அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் அலுவலகம் முன்பு அச்சங்கத்தின் மாவட்ட செயலாளர் ராதிகா தலைமையில் 20க்கும் மேற்பட்ட பெண்கள் வெங்காயத்தை மாலையாக அணிந்து வெங்காய விலை உயர்வை கண்டித்து நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, ‘வீதிக்கு வீதி டாஸ்மாக் கடை வியாபாரம் செய்யும் எடப்பாடி அரசே வெங்காயத்தை வியாபாரம் செய்ய முடிவெடு’, மோடி அரசே, மோடி அரசே வெங்காய விலையை பார்த்தாயா, தாலிக்கு தங்கம் இல்லை, தாளிக்க வெங்காயம் இல்லை’ என்கிற கோஷங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தின் ஒருபகுதியாக வெங்காயம் விலை உயர்வை கண்டித்து மாதர் சங்கத்தினர் வட்டமாக அமர்ந்து வெங்காயத்தை நடுவில் வைத்து ஒப்பாரி வைத்தனர்.’எங்கே போன, எங்கே போன வெங்காயமே எங்கே போயிட்டே’ என ஒப்பாரி வைத்தனர்.
இந்தியா முழுவதும் வெங்காய விலை வானளவு உயர்ந்து இருப்பதாக குற்றம் சாட்டினார்.வெங்காயம் இல்லாமல் எந்த உணவும் சமைக்க முடியாத என்ற நிலையில் இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தான் வெங்காயம் சாப்பிடுவதில்லை என பொறுப்பற்ற பதிலை தெரிவித்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றார்.
மேலும், சாமான்யரின் ஒரு நாள் சம்பளம் 320 ரூபாய் என்ற நிலையில் 150 கொடுத்து வெங்காயம் வாங்க முடியாத சூழலில் இருப்பதாக குற்றம் சாட்டினர். மத்திய மாநில அரசுகள் வெங்காயத்தை மலிவு விலையில் ரேசன் கடைகளில் விற்பனை செய்ய வேண்டுமென வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.