எகிப்து, துருக்கி நாட்டு “வெங்காயம்” இறக்குமதி – வந்து சேர 50 நாள் ஆகுமாம்!!

விர்ரென்று விண்ணை முட்டும் அளவுக்கு வெங்காயம் விலை உச்சத்தில் பறப்பதால், துருக்கி, எகிப்து நாடுகளில் இருந்து 21 ஆயிரம் டன் வெங்காயம் இறக்குமதி செய்ய மத்திய அரசு ஆர்டர் செய்துள்ளது. ஆனால் இந்த வெங்காயம் இந்தியா வந்து சேர 50 நாட்கள் ஆகும் என்பதால், அடுத்து வரும் நாட்களில் விலை மேலும் உயரும் அபாயமே உள்ளது.

 

பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம் என அனைத்து வெங்காயமும் வரலாறு காணாத அளவில், விண்ணை முட்டும் அளவுக்கு விலை உயர்ந்து வருகிறது. கடந்த ஒரு மாதம் முன்பு 40,50 ரூபாய் என விற்ற நிலையில், அடுத்தடுத்த நாட்களில் விறுவிறுவென விலை உயர்ந்து வருகிறது. அதுவும் கடந்த சில நாட்களுக்கு முன்பு கிலோ100 ரூபாயை தாண்டியபோதே மக்கள் கண்ணீர் சிந்த ஆரம்பித்தனர். தொடர்ந்து 120, 150,180 என விலை உயர்ந்து இன்று ரூ 200 என இரட்டை சதம் அடித்து, அனைத்து தரப்பு மக்களையும் ரத்தக் கண்ணீர் வடிக்க வைத்துள்ளது. இன்றைய தங்கம் விலை நிலவரம் என்பது போல், அன்றாடம் வெங்காயம் என்ன விலை? என்பதே பேச்சாக உள்ளது.

 

போதிய விளைச்சல் இல்லாதது, தொடர் மழை போன்ற காரணங்களால் வரத்து குறைந்து வெங்காயத்துக்கு நாடு முழுவதும் பெரும் தட்டுப்பாடே ஏற்பட்டுள்ளது. வெங்காயம் விலை உயர்வு விவகாரம் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்து, மத்திய அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.

 

இந்நிலையில், தட்டுப்பாட்டையும், விலை உயர்வையும் சமாளிக்க துருக்கி, எகிப்து நாடுகளில் இருந்து 21 ஆயிரம் டன் வெங்காயம் இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஆனால் இந்த இறக்குமதி வெங்காயம் இந்தியா வந்து சேர இன்னும் 50 நாட்கள் வரை ஆகுமாம். இதனால் தற்போதைக்கு வெங்காயம் விலை குறைய வாய்ப்பில்லை என்றும், இன்னும் விலை கூடும் அபாயம் உள்ளதாகவே கூறப்படுவதால், பொதுமக்கள் கதிகலங்கிப் போயுள்ளனர்.


Leave a Reply