சூடான் தீ விபத்தில் இறந்ததாக கூறப்படும் நாகையை சேர்ந்த ராமகிருஷ்ணன் உயிரோடு இருப்பதாக அவரது உறவினர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். சூடான் தலைநகர் கர்துமில் உள்ள பீங்கான் ஓடு தயாரிக்கும் ஆலையில் கேஸ் லாரி வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் 18 இந்தியர்கள் உட்பட 23 பேர் உயிரிழந்தனர்.
இதில் தமிழகத்தை சேர்ந்த மூவரும் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. நாகை மாவட்டம் திட்டச்சேரி அருகே உள்ள ஆலங்குடிச்சேரி கிராமத்தை சேர்ந்த ராமகிருஷ்ணனும் தீ விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில் விபத்தின் போது அவர் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் வீடியோ உறவினர் வாட்ஸ் அப் எண்ணுக்கு வந்துள்ளது. \
இந்த விவரத்தை நாகை மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்த ராமகிருஷ்ணனின் பெற்றோர் தங்கள் மகனின் உண்மை நிலை குறித்த தகவலை அறிந்து அவரை மீட்டு தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.