தமது மனைவி தன் மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய் என்று சின்னத்திரை நடிகர் ஈஸ்வர் தெரிவித்துள்ளார். ஈஸ்வர் தம்மை அடித்து துன்புறுத்துவதாகவும், தனது மகளிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றதாகவும் சின்னத்திரை நடிகை ஜெயஸ்ரீ புகார் அளித்திருந்தார்.
இதனையடுத்து அடையாறு அனைத்து மகளிர் காவல் துறையினர் ஈஸ்வரை கடந்த வாரம் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஜாமினில் விடுவிக்கப்பட்ட ஈஸ்வர் தனது வழக்கறிஞர்களுடன் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது தான் கஞ்சா அடிப்பதாகவும் சூதாட்டக் கும்பலுடன் தொடர்பு வைத்திருப்பதாகவும் ஜெயஸ்ரீ கூறுவது முற்றிலும் பொய் என்று அவர் தெரிவித்தார்.
சின்னத்திரை நடிகை மகாலட்சுமியுடன் தமக்கு தொடர்பிருப்பதாக ஜெயஸ்ரீ வதந்தி பரப்பி வருவதாகவும் குற்றம் சாட்டிய ஈஸ்வர் மகாலட்சுமியின் கணவர் அணில் என்பவரது தூண்டுதலின் பேரிலேயே ஜெயஸ்ரீ தம்மீது குற்றம் சுமத்தி உள்ளதாகவும் கூறியுள்ளார்.






