மகாராஷ்டிரா ஆளுநருடன் உத்தவ் தாக்கரே சந்திப்பு…! நாளை மாலை முதல்வராக பதவியேற்கிறார்!!

மகாராஷ்டிரா மாநில புதிய முதல்வராக மகா விகாஸ் அகாதி கூட்டணி சார்பில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே நாளை மாலை பதவியேற்கிறார்.முன்னதாக இன்று மாநில ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியை உத்தவ் தாக்கரே சந்தித்துப் பேசினார்.

 

மகாராஷ்டிராவில் ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்து வந்த அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது. திடீரென ரகசியமாக முதல்வர் பொறுப்பேற்ற பாஜகவின் பட்னாவிஸ், சிவசேனா – காங்., – தேசியவாத காங்., கட்சிகளின் உறுதியான எதிர்ப்பு காரணமாக, நேற்று பதவியை ராஜினாமா செய்து விட்டார்.

 

இதையடுத்து மகாராஷ்டிரா அரசியலில், நேற்று காலை முதல் விறுவிறுப்பான திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன. சிவசேனா தலைமையிலான மகா விகாஸ் அகாதி கூட்டணி கட்சிகளின் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார்.

 

இதைத் தொடர்ந்து ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியை சந்தித்த உத்தவ் தாக்கரே ஆட்சியமைக்க உரிமை கோரினார். ஆளுநரும் அதை ஏற்க, நாளை மாலை 6.40 மணிக்கு மும்பை சிவாஜி பூங்கா மைதானத்தில் முதல்வர் பதவியேற்பு விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மகாராஷ்டிரா ஆளுநர் கோஷ்யாரியை, முதல்வராக பதவியேற்க உள்ள உத்தவ் தாக்கரே தனது மனைவி ராஷ்மியுடன் சென்று இன்று காலை மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார்.

 

உத்தவ் தாக்கரேவுடன், பதவியேற்க உள்ள அமைச்சர்கள் பட்டியலை தயாரிப்பது குறித்தும், எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை அமைச்சர்கள் என்பது குறித்தும் சிவசேனா, காங்கிரஸ், என்.சி.பி. ஆகிய 3 கட்சிகளின் தலைவர்களும், சரத் பவார் வீட்டில் சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தினர். இதில் என்.சி.பி., காங்., கட்சிகளுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படும் என்றும் தெரிகிறது.

 

இந்நிலையில், மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் எம்எல்ஏக்கள் பதவியேற்கும் நிகழ்ச்சி இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது. இடைக்கால சபாநாயகராக நியமனம் செய்யப்பட்ட காளிதாஸ் கொலம்ப் கர், புதிய எம்எல்ஏக்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவுக்கு ஆதரவாக தாவி, துணை முதல்வராக பதவியேற்று, பின்னர் ராஜினாமாவும் செய்த அஜீத் பவாரும் இன்று சட்டப் பேரவையில் பதவிப் பிரமாணம் எடுத்தார். பின்னர் அவர் கூறுகையில், தாம் தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏவாகவே நீடிப்பதாக தெரிவித்தார். அஜித் பவாரை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலே உள்ளிட்ட அக்கட்சி எம்எல்ஏக்கள் பலரும் ஆரத் தழுவி வரவேற்றதும் வித்தியாசமான காட்சியாக இருந்தது.


Leave a Reply