மகாராஷ்டிர கூட்டணி அரசுக்கு ப.சிதம்பரம் வாழ்த்து!

விவசாயிகளின் நலனுக்காக மகாராஷ்டிரா அரசு பாடுபட வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரம் வலியுறுத்தியிருக்கிறார். திகார் சிறையில் இருக்கும் அவர், அவரது குடும்பத்தினர் மூலம் தனது கருத்துக்களை ட்விட்டரில் பதிவிட்டு வருகிறார்.

 

அதில் அரசியல் சாசன தினத்தை அரசு கொண்டாடிய வேளையில் மகாராஷ்டிராவில் அரசியல் சாசனம் தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதாக தெரிவித்திருந்தார். கடந்த 23ம் தேதியிலிருந்து 26-ஆம் தேதி வரை இந்த தாக்குதல் நீடித்து வந்ததாகக் குறிப்பிட்டுள்ள சிதம்பரம் இது குடியரசுத் தலைவர் மீதான தாக்குதலாகவும் இருந்ததாக கூறியுள்ளார்.

 

பன்முகத்தன்மை கொண்ட ஒரு சமூகத்திற்கு கூட்டணி அரசுதான் சிறந்ததாக இருக்கும் என்பதை நாடாளுமன்ற ஜனநாயகத்தின் பரிணாம வளர்ச்சியை உற்று நோக்குபவர்கள் அறிவார்கள் என தெரிவித்துள்ள ப.சிதம்பரம் மகாராஷ்டிராவில் புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

 

விவசாயிகள், பெண்கள், குழந்தைகள் ஆகியோரின் நலன்களை பாதுகாப்பதாக புதிய அரசு இருக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.


Leave a Reply